நடிகர் சந்தானம் நடிக்கும் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கூறி அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

Santhanam Movie Controversy : தமிழ் திரையுலகில் காமெடியனாக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர் சந்தானம். அவர் நடிப்பில் தற்போது டிடி நெக்ஸ்ட் லெவல் என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது. ஆர்யா தயாரித்துள்ள இப்படம் வருகிற மே 16ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல், திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியை அவமதிக்கும் விதமாக உள்ளதாக இந்து அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

டிடி நெக்ஸ்ட் லெவல் பாடலை நீக்க வலியுறுத்தல்

சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் இடம்பெற்றுள்ள 'ஸ்ரீநிவாச கோவிந்தா' பாடலை திருப்பதி பக்தர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர். இந்தப் பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. இதற்கு பதிலளித்த சந்தானம், திருமலையை அவமதிக்கவில்லை என்றும், தணிக்கை க்குழு விதிகளின்படி படம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

எல்லாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை: சந்தானம்

மேலும், இந்து அமைப்புகளின் குற்றச்சாட்டுகளுக்கு கடுமையாக பதிலளித்த சந்தானம், “எல்லாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை” என்று கூறினார். இவரது பதில் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கோபமடைந்த இந்து அமைப்புகள், பல்வேறு காவல் நிலையங்களில் சந்தானம் மீது புகார் அளித்துள்ளன.

மே 16 அன்று டிடி நெக்ஸ்ட் லெவல் வெளியீடு

டிடி நெக்ஸ்ட் லெவல் ஒரு காமெடி திகில் படமாக உருவாகியுள்ளது. எஸ். பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்க, கீதிகா திவாரி நாயகியாக நடித்துள்ளார். செல்வராகவன், கௌதம் மேனன், நிழல்கள் ரவி, கஸ்தூரி சங்கர், யாஷிகா ஆனந்த், ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் மே 16ந் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்துக்கு போட்டியாக சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய படங்களும் ரிலீஸ் ஆக உள்ளன.