அட்லீ இயக்கிய ஜவான் படம் 14 தாதா சாகேப் பால்கே விருதுகளை வென்று அசத்தி உள்ளது.
2024-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருதுகள் வழங்கும் விழா மும்பையில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த மாபெரும் விருது வழங்கும் விழாவில் ஷாருக்கான், ராணி முகர்ஜி, கரீனா கபூர், நயன்தாரா, அட்லீ, ஷாஹித் கபூர், சந்தீப் ரெட்டி வங்கா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் ஜவான் 4 விருதுகளையும், அனிமல் மூன்று விருதுகளையும், பதான் மற்றும் 12வது ஃபெயில் தலா இரண்டு விருதுகளையும் வென்றன.
ஜவான் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது ஷாருக்கானுக்கு வழங்கபப்ட்டது. அதே போல் ஜவான் படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருது நயன்தாராவுக்கு வழங்கப்பட்டது. மேலும் ஜவான் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தாதா சாகேப் பால்கே விருது அனிருத் ரவிச்சந்தருக்கு வழங்கப்பட்டது. அதே போல் விமர்சகர்களின் சிறந்த இயக்குனருக்கான விருதை அட்லீ பெற்றார். இதன் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான முதல் படத்திலேயே அட்லீ மாஸ் காட்டி உள்ளார்.
இயக்குனர் ஷங்கரின் உதவியாளராக இருந்த அட்லீ ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்த அட்லி, தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என தொடர் வெற்றிகளை கொடுத்தார். இதன் மூலம் மிகக் குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குனர்களில் ஒருவராக அட்லி மாறினார். மோஸ்ட் வாண்டட் டைரக்டராக மாறிய அட்லீ நாட்டின் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் ஒருவராகவும் மாறி உள்ளார்.
இதை தொடர்ந்து பாலிவுட்டில் ஜவான் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் அட்லீ. கடந்த ஆண்டு செப்டம்பரில் திரையரங்குகளில் வெளிவந்த ஜவான், உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் ₹1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அட்லீ இயக்கிய இப்படத்தில் ஷாருக், நயன்தாரா, சன்யா மல்ஹோத்ரா, பிரியாமணி, தீபிகா படுகோன் மற்றும் சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்தனர். நயன்தாரா ஹிந்தியில் அறிமுகமான முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
