‘ஜனநாயகன்’ திரைப்படம் விஜய்க்கு கடைசி திரைப்படம் என்று பலரும் எண்ணியுள்ள நிலையில் நடிகை மமிதா பைஜூ விஜயின் முடிவு குறித்து புதிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

Mamitha Bajiu talking about vijay last movie

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் விஜய். இவர் சுமார் 69 படங்களில் நடித்து முடித்துள்ளார். தற்போது இவர் திரைத்துறையில் இருந்து விலகி தீவிர அரசியலில் குதித்துள்ளார். சில ஆண்டுகளாகவே விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்கிற பேச்சுக்கள் பொதுவெளியில் இருந்த நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி இரண்டாம் தேதி தமிழக வெற்றிக்கழகம் என்கிற கட்சியைத் தொடங்கினார். சில ஆண்டுகளாக பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை மாவட்ட வாரியாக அழைத்து அவர்களுக்கு பரிசு மற்றும் விருதுகள் கொடுக்கும் விழாவை விஜய் நடத்தி வந்தார். இது அவருடைய அரசியலுக்கு அடித்தளமாக பார்க்கப்பட்டது.

கட்சி தொடங்கிய நடிகர் விஜய்

முதல் தலைமுறை வாக்காளர்களை கவர்வதற்காக அவர் இந்த விழாவை நடத்தி வருவதாக அப்போது விமர்சனம் இருந்தது. பின்னர் ஒரு கட்டத்தில் அவர் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார். தமிழகத்தின் உரிமைகளை மீட்கப் போவதாக கூறி கட்சி தொடங்கிய அவர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள், அம்பேத்கர், பெரியார் ஆகியோரை கொள்கைத் தலைவர்களாகவும், திராவிடமும் தேசியமும் தனது கட்சியின் இரு கண்கள் என்றும் கூறி அரசியல் பயணத்தைத் தொடங்கினார். தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை கட்சியின் நிர்வாகிகளாக மாற்றினார். தற்போது தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் மத்தியில் ஆளும் பாஜக இருவரும் தங்கள் கொள்கை எதிரிகள் என்று கூறி அவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

2026 தேர்தல் மட்டுமே இலக்கு

இந்த நிலையில் விஜய் திரைத்துறையில் இருந்து விலகப் போகிறார் என்கிற செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. விஜய் அரசியலுக்கு வந்த்து மகிழ்ச்சியை ஏற்படுத்திய அதே நேரத்தில் அவர் திரைப்படங்களில் இனி நடிக்க மாட்டார் என்கிற செய்தி ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. ரசிகர்கள் தொடங்கி பலரும் விஜய் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், சினிமாவில் அவர் மீண்டும் நடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் விஜய் இது குறித்து எந்த முடிவையும் அறிவிக்காமல் அமைதி காத்து வருகிறார். ‘ஜனநாயகன்’ படத்திற்குப் பின்னர் அவர் தீவிர அரசியலில் ஈடுபடப் போகிறார் என்றும், 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலே அவரது இலக்கு என்றும் தவெகவினர் கூறி வருகின்றனர்.

ஜனநாயகன் கடைசி படம் இல்லை - மமிதா

தமிழகத்தில் நடந்த இடைத்தேர்தல்கள் எதிலும் போட்டியிடாமல் 2026 தேர்தலை மட்டுமே குறியாக வைத்து விஜய் காய்களை நகர்த்தி வருகிறார். எனவே சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று காட்ட வேண்டிய அவசியம் விஜய்க்கு இருக்கிறது. இந்த நிலையில் அவரது பிறந்த நாள் நேற்று (ஜூன் 22) கொண்டாடப்பட்டது. அவரது பிறந்த நாளில் நடிகை மமிதா பைஜூ சில கருத்துக்களை கூறியுள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘ஜனநாயகன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மமிதா. படப்பிடிப்புத் தளத்தில் விஜய்யிடம் இதுதான் உங்கள் கடைசி படமா எனும் மமிதா கேட்டதாகவும், அதற்கு விஜய் 2026 ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகளைப் பொறுத்து மேற்கொண்டு நடிப்பது குறித்து இறுதி முடிவு எடுப்பேன் என கூறியதாகவும் மமிதா தெரிவித்துள்ளார்.

விஜயை விமர்சிக்கும் அரசியல் விமர்சகர்கள்

இது விஜய் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் அரசியல் களத்தில் விமர்சனங்களையும் கிளப்பியுள்ளது. 2026 தேர்தலில் விஜய் நம்பிக்கையை இழந்துவிட்டாரா? கடைசி படம் என்கிற முடிவை மாற்ற காரணம் என்ன? வெற்றி கிடைத்தால் மட்டுமே தீவிர அரசியல் என்கிற விஜயின் நிலைப்பாடு சரியானதா? என்றெல்லாம் அவர் குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Scroll to load tweet…