என் மகளுக்கும் ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சியில் அப்படி நடந்தது! இருந்தாலும் இதை பண்ணுங்க... குஷ்பு வைத்த கோரிக்கை!
ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடந்த நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு தன்னுடைய மகள் டைமண்ட் பாஸ் வைத்திருந்த போதிலும் அவரால் பார்க்க முடியவில்லை என நடிகை குஷ்பு X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி சென்னையில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளதாக அறிவித்தார். ஆனால் அன்றைய தினம், சென்னையில் மழை கொட்டி தீர்த்ததால் இந்த இசை நிகழ்ச்சி செப்டம்பர் 10ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், 'மறக்குமா நெஞ்சம்' என்கிற பெயரில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி நடத்தினார். மழை வந்தால் ரசிகர்களை பாதிக்காத வண்ணம், நிகழ்ச்சியை பார்க்க வரும் ரசிகர்களுக்கு ரெயின் கோட் ஒன்றையும் வழங்க நிகழ்ச்சி நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி, சென்னை பனையூரில் உள்ள பிரம்மாண்ட மைதானத்தில் நடைபெற்றது. இதை காண ஏராளமான ரசிகர்கள் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்தனர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி, ஏற்பாட்டாளர்கள் டிக்கெட் வழங்கியவர்களுக்கு கூட சரியான இடத்தை ஒதுக்காததால் பெரும் பரபரப்பு நிலவியது. பலர் அமர்ந்து பார்க்க சேர் கிடைக்காததால், நின்றபடியே நிகழ்ச்சியை பார்த்தனர். அதுமட்டுமின்றி உள்ளே செல்ல இடம் இல்லாததால், பலர் கூட்ட நெரிசலில் சிக்கி, பெண்கள் சிலர் மயக்கமடைந்தனர்.
சிலர் இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி கொண்டு பெண்களிடம் அத்தி மீறி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. அதே போல் பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. வயதானவர்கள் பலர் டிக்கெட் வாங்கியும், இந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டாம் என வெளியேறினர். இது குறித்த வீடியோக்கள் எக்ஸ்த்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆயிரக்கணக்கில் டிக்கெட்டுக்கு காசு வாங்கும் நிகழ்ச்சியாளர்கள் இதுபோல் நடந்து கொள்வதா என பலர் கோபத்தில் விமர்சித்தனர்.
இந்த நிகழ்ச்சியால் ஏ ஆர் ரகுமான் மீது வைத்திருந்த நம்பிக்கை, மரியாதை போய்விட்டதாக ஆவேசமாக சமூக வலைதளத்தில் சிலர் பதிவிட்டதையும் பார்க்க முடிந்தது. இதை தொடர்ந்து ஏ ஆர் ரகுமான் இந்த நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் போன ரசிகர்களுக்காக தன்னுடைய வருத்தத்தை வெளிப்படுத்தியது மட்டும் இன்றி, அவர்களின் பணமும் திரும்ப கொடுக்கப்படும் என தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார்.
அய்யோ 25 கோடி போச்சே.! மகளுக்கு கொலை மிரட்டல்! நடிகை கௌதமி காவல்துறை ஆணையரிடம் பரபரப்பு புகார்..!
ஆனாலும் தொடர்ந்து சிலர் அவதூறான விமர்சனங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வரும் நிலையில், நடிகை குஷ்பு X தளத்தில் பதிவு ஒன்றை போட்டு ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். இந்த பதிவில் "சென்னை இசை நிகழ்ச்சியில் ARR ரசிகர்கள் எதிர்கொண்ட பெரும் குழப்பம் மற்றும் சிரமங்களைப் பற்றி கேள்விப்பட்டேன். ரஹ்மான் எப்போதும் தனது ரசிகர்கள் ஏமாற்றமடையாமல் பார்த்துக் கொள்பவர். ஆனால் இப்படி ஆகிவிட்டது. என்னுடைய மகள் டைமண்ட் பாஸ் வைத்திருந்தும் அவருக்கும், அவரின் தோழிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. அவர்கள் நிகழ்ச்சி நடந்த இடத்தை அடைய 3 மணிநேரத்திற்கு மேல் ஆனது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
மக்கள் எதிர்கொண்ட எந்தவொரு பிரச்சினைக்கும் ஏ.ஆர்.ரகுமானால் பொறுப்பேற்க முடியாது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சரியாமல் செய்திராத நிர்வாகத்தின் முழுமையான தோல்வி இது. ரஹ்மான் தனது இசை, வார்த்தைகள் மற்றும் செயல்கள் மூலம் எப்போதும் அன்பையும் அமைதியையும் பகிர்ந்து கொண்டுள்ளார். அவருக்குத் தகுதியான அனைத்தையும் தொடர்ந்து வழங்குவோம். அவருடன் நிற்போம், எல்லாம் சரியாகிவிடும் என்று கூறியுள்ளார்.