நடிகர் வேல ராமமூர்த்தி நேற்று யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் மாரிமுத்து குறித்து பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்
பிரபல நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பரியேறும் பெருமாள் தொடங்கி ஜெயிலர் வரை அவர் பல படங்களில் நடித்திருந்தாலும், எதிர்நீச்சல் சீரியலில் அவர் நடித்தது அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. சன் டிவியில் ஒளிப்பராகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்ததன் மூலம் தமிழக மக்களின் நீங்கா இடம் பிடித்துள்ளார். மாரிமுத்து பேசிய வசனங்கள், அவரின் பாடி லாங்குவேஜ் அனைத்தும் மீம் மெட்டீரியலாக மாறி எப்போதும் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்திருந்தன. எனவே நடிகர் மாரிமுத்து உயிரிழந்ததை தங்கள் வீட்டில் நடந்த இறப்பாக மக்கள் கருதி வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்து நடித்து வந்த ஆதி குணசேகரன் கதாப்பாத்திரத்தில் யார் நடிப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்தது. இந்த நிலையில் பிரபல எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி இந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் நடிகர் வேல ராமமூர்த்தி நேற்று யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் மாரிமுத்து குறித்து பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார். அவரின் பேட்டியில் “ நானும் மாரிமுத்து தற்போது ஒரு படத்தில் அண்ணன் தம்பியாக நடித்து வருகிறோம். உறங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் ஒன்றாகவே இருந்தோம். அப்படி சில தினங்களுக்கு முன்பு கை அருகில் இருந்த நபர், இன்று இல்லை என்பதை நினைக்கும் போது, என்னால் தாங்க முடியவில்லை. அப்படி ஒரு பெரிய துயரம் இது. படம் முழுக்க நாங்கள் இருவரும் எதிரி போல் இருப்போம். படப்பிடிப்பு முடிந்த உடன் ஒன்றாக காரில் செல்வோம்.
அப்படி காரில் சென்ற போது ஹோட்டல் முன்பு கார் நின்றது. நான் அடுத்து காரைக்குடி ஷூட்டிங் செல்ல வேண்டும். அவர் இங்கு சென்னைக்கு புறப்பட்டார். கிளம்பும் அவசரத்தில் நான் மாரிமுத்துவின் முகத்தை கூட சரியா பார்க்காமல், சார் பார்ப்போம் சார்” என்று கூறிவிட்டு ஹோட்டலுக்கு சென்றுவிட்டேன். நான் கிளம்பிவிட்டு கூட அவரை கடைசியாக பார்க்கவில்லை. சென்னை வந்த 2-வது நாளில் அவர் இறந்துவிட்டதாக செய்தியாக வருகிறது. அது ஒரு பெரிய துயரம்.. மறக்க முடியாதது” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் “ மாரிமுத்து ஒரு அற்புதமான கலைஞர், எப்போது தீக்குச்சியாக இருப்பார். எவ்வளவுக்கு எவ்வளவு சிரிப்பாரோ அல்லது அவ்வளவு கோபப்படுவார். சினிமாவை நன்றாக தெரிந்தவர்.. கஷ்டப்பட்டு அடிநிலையில் இருந்து வந்து முன்னேறியவர். எதிர்நீச்சல் சீரியல் மூலம் உச்சத்தில் இருந்தவர். தமிழ்நாடே துயரப்படும் அளவுக்கு இருந்திருக்கிறார் எனில் அவர் வெற்றிகரமான நடிகர். மாரிமுத்து வெளியே பார்ப்பதற்கு சற்று கோபமான ஆள் மாதிரி தெரிந்தாலும், மிகவும் அன்பானவர். மாரிமுத்துவின் நேர்மையான வெற்றி நிரந்தரமானது. அது மாறவே மாறாது” என்று தெரிவித்தார்.
