என் தம்பிகளை இழந்திருக்கிறேன்... மின்சாரம் தாக்கி பலியான ரசிகர்கள் - வீடியோ காலில் ஆறுதல் சொன்ன சூர்யா
நடிகர் சூர்யாவின் பிறந்தநாளுக்கு கட்அவுட் வைக்கும்போது மின்சாரம் தாக்கி பலியான ரசிகர்கள் இருவரின் குடும்பத்தினரையும் வீடியோ காலில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார் சூர்யா.
நடிகர் சூர்யா தனது 48-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவரின் பிறந்தநாளை அவரது ரசிகர்களும் தடபுடலாக கொண்டாடினர். அந்த வகையில் ஆந்திராவில் உள்ள நரசராவ்பேட்டையில் சூர்யாவின் பிறந்தநாளுக்காக கட் அவுட் ஒன்றை ஏற்பாடு செய்திருந்த ரசிகர்கள், அதனை நிறுவ சென்றபோது மின்சாரம் தாக்கி பலியாகினர். இதில் வெங்கடேஷ் மற்றும் அவரது நண்பர் சாய் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
கல்லூரியின் ஒன்றாக படித்து வந்த இருவரும் நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகர்கள் ஆவர். இதனால் சூர்யாவின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அவர்கள் உற்சாகத்துடன் பேனர் கட்டும் போது பலியான சம்பவம் சூர்யா ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... சூர்யா பிறந்தநாளுக்கு பேனர் வைத்தபோது மின்சாரம் தாக்கி ரசிகர்கள் இருவர் பலி
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து அறிந்ததும் மனமுடைந்துபோன நடிகர் சூர்யா, உடனடியாக உயிரிழந்த ரசிகர்களின் குடும்பத்தினரை வீடியோ காலில் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார். அப்போது உயிரிழந்த ரசிகர்களின் பெற்றோர்கள் கண்ணீர்விட்டு அழுததை பார்த்து கலங்கிப் போன சூர்யா, இந்த இழப்பு தன்னை மிகவும் பாதித்ததாகவும், இரு தம்பிகளை இழந்திருப்பதாகவும் கூறினார்.
மேலும் அந்த குடும்பங்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வதாகவும் சூர்யா உறுதியளித்தார். அவர்களது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறிய சூர்யா, தன் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார். நடிகர் சூர்யா, வீடியோ காலில் பேசியதை வீடியோ பதிவு செய்து ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... ரூ.100 கோடி வசூலித்ததா சிவகார்த்திகேயன் படம்? மாவீரன் படத்தின் 10 நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ