பிரபல நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறந்த மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருவதாக ராதிகா சரத்குமார் தெரிவித்தார். 

இந்நிலையில் கொரோனாவில் இருந்து மீண்ட சுப்ரீம் ஸ்டார் சரத்குமார். இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப உள்ளதாக அவருடைய மனைவியும், பிரபல நடிகையுமான ராதிகாவும், மகள் வரலட்சுமி சரத்குமாரும் ட்விட் செய்துள்ளனர். முதலில் ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், எனது கணவர் இன்று டிஸ்சார்ஜ் ஆகிறார். ஐதராபாத் அப்பல்லோ மருத்துவர்கள் தீபக், சுனிதா, விஷ்ணு விஜயகுமார், ரவி கிரண், சந்திரகாந்த் மற்றும் செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் என அவரை நல்ல முறையில் கவனித்துக் கொண்ட அனைவருக்கும் நன்றி. இது ஒரு கடினமான மற்றும் மன உளைச்சல் மிகுந்த சமயம். இந்த சமயத்தில் எங்களுக்காக பிரார்த்தித்த நலம் விரும்பிகள் அனைவருக்கும் நன்றி. உங்களுடைய அன்பிற்கு மிக்க நன்றி. தயவு செய்து உங்களிடைய அன்புக்குரியவர்களை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ளுங்கள். கொரோனா இன்னும் உள்ளது என பதிவிட்டுள்ளார். 

இதையும் படிங்க: நடிகை மீனா பொண்ணு நைனிகாவா இது?... ‘தெறி’ பேபி இப்ப நெடு நெடுன்னு வளர்ந்துட்டாங்களே...!

அதேபோல் சரத்குமாரின் மகளும், பிரபல நடிகையுமான வரலட்சுமி தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,  ‘எனது அப்பா இன்று டிஸ்சார்ஜ் ஆகிறார். இருப்பினும், 10 நாள்களுக்கு வீட்டில் தனிமையில் இருக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மருத்துவர்கள் தீபக், சுனிதா, விஷ்ணு விஜயகுமார், ரவி கிரண், சந்திரகாந்த் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், காவலர்கள் உள்ளிட்ட உதவிப் பணியாளர்களுக்கும் நாங்கள் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

அவர்களுடைய அர்பணிப்பான பணி, எனது தந்தை குணமடைந்து நல்ல உடல்நலத்துடன் திரும்ப உதவியுள்ளது. அவருடைய முழு சக்தியையும் மீண்டும் பெற்று முழுவதுமாக குணமடைதற்கு அடுத்துவரும் 15 நாள்களுக்கு அவர் கவனமாக இருக்கவேண்டும். நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சினிமா மற்றும் அரசியல் வட்டார நண்பர்கள் மற்றும் அப்பாவின் ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் ஆகியோர் அப்பா குணமடைவதற்கு பிரார்த்தனை செய்ததற்கு நன்றி.

 

இதையும் படிங்க: விஜே சித்ரா தற்கொலை... போலீசாரிடம் ஹேமந்த் அளித்த அதிர்ச்சி தகவல்கள்...!

இது நமக்கு கொரோனா இன்னமும் ஆபத்தானதுதான் என்பதையும், நாம் பாதுகாப்பு நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்றவேண்டும் என்பதையும் காட்டுகிறது. உங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் பாதிப்படையும்போதுதான் நாம் கொரோனா வைரஸ் எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர்கிறோம். எப்போதும் முகக் கவசம் அணியுங்கள். அவசியத் தேவைக்கு மட்டும் வெளியே செல்லுங்கள். சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். பாதுகாப்பாக இருங்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.