உலக திரைப்பட வரலாற்றில் புது முயற்சியாக...இரண்டு நாய்கள் மட்டுமே நடித்து வெளியாகும் திரைப்படம் 'கிளவர்'!
இரண்டு நாய்கள் மட்டுமே நடித்த ஒரு முழு நீள திரைப்படத்தை கார்த்திகேயன் பிரதர்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் என்ற நிறுவனம் தயாரித்து சாதித்துள்ளது.
தேவர் பிலிம்ஸ் படங்களிலும், இராமநாராயணன் இயக்கிய படங்களிலும் நடிகர்களுடன் பாம்பு, குரங்கு, நாய், மாடு போன்ற விலங்குகள் நடித்து பல படங்கள் வந்துள்ளன. அதன் பிறகு விலங்குகளை வைத்து ஒரு சில படங்கள் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஒரு சிறிய இடை வெளிக்கு பிறகு 'கிளவர்' என்ற படம் உருவாகி உள்ளது. இந்தப் படத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை இரண்டு நாய்கள் மட்டுமே நடித்துள்ளன. மதுரை மாவட்டத்தில் உள்ள டி.இராமநாதபுரம் கிராமத்தை சுற்றி உள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு வாசு ஒளிப்பதிவு செய்ய, முத்துமுனியசாமி படத்தொகுப்பு செய்துள்ளார். ரகுநாத் இசையமைக்க, தீபக்கார்த்திகேயன் , சஞ்சய் கார்த்திகேயன் இருவரும் இணை தயாரிப்பாளராக இருந்துள்ளனர்.
இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார் செந்தில்குமார் சுப்ரமணியம். இவர் இப்படம் பற்றி கூறுகையில், " உலக திரைப்பட வரலாற்றில் முதல்முறையாக இரண்டு நாய்களை மட்டுமே நடிக்க வைத்து இந்தப் படத்தை இயக்கி உள்ளேன். அம்மா நாயிடமிருந்து குட்டி நாயை ஒரு சைக்கோ திருடி சென்றுவிடுகிறான்.
தனது குட்டியை மீட்க அம்மா நாய் எப்படி கண்டுபிடித்து மீட்டு வருகிறது என்பதை கதைக்களமாக்கி அதை விறுவிறுப்பான திரைக்கதையில் திகிலும், திரில்லும் கலந்து படத்தை டைரக்ட் செய்துள்ளேன். புது முயற்சியாய் இந்த படத்தில் இரு நாய்களை தவிர வேறு யாரையும் நடிக்க வைக்கவில்லை. கமர்ஷியலாக படத்தை மக்கள் பார்த்து ரசிக்கும்படி இப்படம் இருக்கும். கிளவர் என பெயரிடப்பட்டுள்ள இந்த படம், அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது என தெரிவித்துள்ளார்.