நெடுங்குன்றம் சூர்யாவை தொடர்ந்து பிரபல ரவுடி படப்பை குணாவிற்கு பாஜகவில் முக்கிய பதவி..!

First Published Oct 6, 2023, 11:37 AM IST

நெடுங்குன்றம் சூர்யாவை தொடர்ந்து பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி படப்பை குணா பாஜகவில் இணைந்த கையோடு அவருக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஓபிசி அணி தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 

Padappai Guna

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மதுரமங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர் பிரபல ரவுடி படப்பை குணா. இவர் மீது ஆள் கடத்தல், கொலை, கொலை முயற்சி என 40க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்களை மிரட்டி மாமுல் வாங்கி வருவதாகவும், கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு உள்ளிட்டவை செய்து வருவதாக தொடர்ந்து புகார்கள் உள்ளன. 

இந்நிலையில், சென்னை புறநகர் பகுதிகளில் கொடிகட்டிப் பறக்கும் கட்ட பஞ்சாயத்து, மாமூல் வசூல் ஆகியவற்றை தடுக்க என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் என அழைக்கப்படும் கூடுதல் எஸ்.பி. வெள்ளத்துரை தலைமையில் சிறப்பு படை அமைக்கப்பட்டதை அடுத்து படப்பை குணா தலைமறைவானார். பின்னர் என்கவுன்டருக்கு பயந்து கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி படப்பை குணா சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். சிறையில் இருந்த படப்பை குணா சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். 

இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய வார்டு கவுன்சிலராக பதவி வகித்து வரும், குணாவின் மனைவி எல்லம்மாள்  கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். தொடர்ந்து பல்வேறு வகையில்  கட்சிப் பணியிலும் படப்பை குணாவின் மனைவி எல்லம்மாள் ஈடுபட்டு வந்தார். மறைமுகமாக கட்சிக்கு தேவையான நிதி உதவிகள் உள்ளிட்டவற்றை படப்பை குணா செய்து வந்தார். 

இந்நிலையில், பாஜகவில் இணைந்த படப்பை குணாவுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஓபிசி அணித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் பிரபல ரவுடி நெடுங்குன்றம் சூர்யா பாஜக மாநில பட்டியலின அணி மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

click me!