Jun 6, 2024, 10:07 PM IST
திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் ஏராளமான பயணிகள் வந்து செல்லும் ஜன நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் ஒன்று. இந்நிலையில் இங்கு சுற்றித் திரியும் சிறுவர்கள் சிலர், தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஃபெவிக்கால், தின்னர் போன்ற பொருட்களை பயன்படுத்தி போதை அடையும் சிறுவர்கள் அதிகரித்து வருகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பேருந்து நிலையத்தின் உள்ளே சிறுவர்கள் சிலர் வந்து நிற்பதும், பின்னர் தங்களிடம் உள்ள துணியை அதில் நனைத்து பனியன் உள்ளே வைத்து பொது இடத்தில் உறிஞ்சி போதை அடைகின்றனர். இரண்டு சிறுவர்களும் மாற்றி மாற்றி போதை ஏறியவுடன் அங்கு இருந்து சாதாரணமாக கிளம்பி செல்கின்றனர்.
விலை குறைவாக கிடைக்கும் பொருட்களை கொண்டு போதையில் திளைக்க முயலும் சிறுவர்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் உடனடியாக தீவிர நடவடிக்கை எடுத்து சிறுவர்களிடம் உள்ள இது போன்ற போதைப் பழக்கங்களை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.