தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மஞ்சள் பயிர் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. பணப்பயிர்களில் மஞ்சள் முக்கியமானது. முந்தைய காலம் முதல் தற்போதைய காலம் வரை மக்களின் பயன்பாட்டிலும், சமையல்களிலும், மங்கள நிகழ்ச்சிக்கு பயன்படுத்துவதிலும் மஞ்சள் முக்கியத்துவம் பெற்றுள்ளது. உலகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. மஞ்சளில் இருந்து எடுக்கப்படும் கர்க்குமின் என்ற நிறமி அதிக மருத்துவ குணங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

மஞ்சள் பயிர் கிழங்கின் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. மஞ்சள் நடவிற்கு விரலி மற்றும் குண்டு மஞ்சள் ரகங்கள் பயன்படுத்தப்படுகிறது. விதை மஞ்சள் 25 முதல் 10 கிராமிற்கு எடை குறையாமலும், மூன்று முதல் நான்கு பரு கொண்டதாகவும், இருக்க வேண்டும். சாகுபடி செய்ய ஒரு எக்டருக்கு 2000 முதல் 2500 கிலோ விதை மஞ்சள் தேவைப்படுகிறது.

தரமான, அதிக விளைச்சல் தரக்கூடிய மஞ்சள் ரகங்கள் வேளாண் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி கல்லூரிகளில் உருவாக்கப்படுகிறது.

விதை கிழங்கிற்கு பதிலாக மஞ்சள் நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. மஞ்சள் நாற்றை விதைக்கிழங்கின் மூலம் சாகுபடி செய்வதைப் போலவே சாகுபடி செய்யலாம். 25 முதல் 30 நாள் வயதுடைய நாற்றுகளை நடவிற்கு பயன்படுத்தலாம். மஞ்சள் நட்ட பிறகு 240 நாட்களில் பயிர் அறுவடைக்கு தயாராகிவிடும்.

இதன் மூலம் ஒரு ஏக்கருக்கு தேவையான நாற்றுகளை உற்பத்தி செய்ய 500 கிலோ மஞ்சள் போதுமானது. ஒரு ஏக்கருக்கு நடவு செய்ய 55 ஆயிரம் முதல் 60 ஆயிரம் நாற்றுக்கள் தேவைப்படுகிறது.

விதைக் கிழங்கினை பயன்படுத்தும்போது 80 சதவீதம் பயிர்கள் முளைத்திருக்கும். ஆனால், நாற்றுகளை நடவிற்கு பயன்படுத்துவதால் 98 சதவீதம் பயிர்கள் முளைத்திருக்கும்.

நற்றுக்கள் நட்ட இரண்டாம் மாதத்திலேயே கிழங்கு உருவாக ஆரம்பித்துவிடும். எட்டாம் மாதத்திலேயே நன்கு வளர்ச்சியடைந்து ஐந்து முதல் ஆறு தூர்கள் கொண்ட கிழங்குகள் அறுவடைக்கு தயாராகிவிடும்.

நோய் மற்றும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த தகுந்த பயிர்பாதுகாப்பு முறைகளை பின்பற்றுவது அவசியம்.

விதைக்கிழங்கு பயிரிட்டு கிடைக்கும் விளைச்சலை விட அதிகபட்சமாக 50 சதவீதம் வரை நாற்றுகள் நடுவதன் மூலம் பெறலாம்.