Asianet News TamilAsianet News Tamil

பயிரை கொடூரமாகத் தாக்கும் பூச்சிகளும்; அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளும் ஒரு அலசல்…

Viciously attack crop pests Other methods of controlling them in a gadget
viciously attack-crop-pests-other-methods-of-controllin
Author
First Published Apr 4, 2017, 12:01 PM IST


1.. அறுவடைக் கரையான்:

பயிரை அறுவடை செய்வதுபோல தரைக்கடியில் வாழும் அனகாந்தோடெர்மிஸ் என்னும் கரையான்கள் நெற்பயிரை வெட்டி சிறு துண்டுகளாக்கி கூட்டிற்குள் எடுத்துச் சென்று விடுவதால் அறுவடைக் கரையான்கள் எனப் பெயர் பெற்றது.

பூச்சி குறித்த விபரம்:

** நெல் வயலில் ஆங்காங்கே சிறுசிறு மண் குவியல் போல அறுவடைக் கரையான் புற்று காணப்படும்.

** அறுவடைக் கரையானின் புற்று சுமார் ஒரு மீட்டர் அகலத்திற்கு 8 மீ. ஆழம் வரை இருக்கும்.

** கரையான் கூட்டத்தில் ராஜா, ராணி, வேலைக்கார கரையான் மற்றும் சிப்பாய் கரையான் கள் என பல பிரிவுகள் உள்ளன.

** இதில் ராஜா, ராணி கரையான்கள் இனப் பெருக்கத்திற்காகவும் வேலைக்கார கரையான்கள் மற்ற வேலைகளை செய்வதற்கும் என்ற சமூக அமைப்பு உள்ளது.

அறிகுறிகள்:

** மாலைநேரம் மற்றும் இரவு நேரத்தில் வேலைக்கார கரையான்கள் புற்றைவிட்டு வெளியேவந்து நெற்பயிரை வெட்டி துண்டுகளாக்கி புற்றுக்குள் எடுத்துச் செல்லும்.

** சில நேரங்களில் சிறு துண்டுகளை கூட்டிற்கருகில் விட்டுச் செல்லும் சிறிய கரையான்கள் அந்த துண்டுகளை புற்றிற்குள் எடுத்துச் செல்லும்.

கட்டுப்படுத்தும் முறைகள்:

** சிறு சிறு துண்டுகளாக வெட்டிய வைக்கோலை (200 கிலோ) குளோர்பைரிபாஸ் (400 மிலி) மருந்து கலந்த நீரில் இரண்டு நிமிடம் ஊறவைத்து வடித்து பின் வயலில் புற்றின் அருகில் மாலை வேளைகளில் வைத்து கரையான்களை கவர்ந்து அழிக்கலாம்.

** குளோர்பைரிபாஸ் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மிலி என்ற வீதத்தில் கலந்து பயிர் மற்றும் மண்ணின் மீது நன்கு படும்படி மாலை நேரங்களில் தெளித்தும், புற்றுக்குள் ஊற்றியும் கட்டுப் படுத்தலாம்.

** 5 சதவீதம் வேப்பங்கொட்டைச்சாறு கரைசலை தெளித்து கட்டுப்படுத்தலாம்.

2.. இலை சுருட்டுப்புழுக்கள்:

காற்றின் ஈரப்பதம் அதிகளவிலும் வெப்பநிலை குறைந்த அளவிலும் உள்ள காலங்களில் இலை சுருட்டுப்புழுவின் தாக்குதல் அதிகளவில் இருக்கும். அதிகப் படியான தழைச்சத்து இடுதல் மற்றும் நெருக்கமான பயிர் இடைவெளி போன்ற காரணிகளும் இவற்றின் பெருக்கத்திற்கு ஏதுவாகின்றன.

அறிகுறிகள்:

** இலைகள் நீளவாக்கில் சுருட்டப்பட்டு மெல்லிய இழைகளால் பின்னப்பட்டிருக்கும்.

** சுருட்டப்பட்ட இலைகளில் பச்சையம் சுரண்டப்பட்டு வெண்மையாக காணப்படும்.

** இலைகள் காய்ந்த சருகுபோல் காணப்படும்.

** பயிர் வளர்ச்சிப் பருவத்தில் தாக்குதல் அதிகம் இருக்கும்.

கட்டுப்படுத்தும் முறைகள்:

** புழுதி விதைப்பு செய்த வயலில் பயிர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் பொழுது இலைசுருட்டுப் புழுக்கள் தாக்குதல் அதிகமாக காணப்படும். இதைத் தவிர்க்க நெல் விதைப்பு கருவிகளை கொண்டு வரிசைக்கு வரிசை 22 செ.மீ. இடைவெளியில் சீராக விதைப்பு செய்வதன் மூலம் பயிருக்கு தேவையான காற்றோட்டம், சூரிய ஒளியினை கிடைக்கச் செய்து பூச்சிகளின் தாக்குதலை குறைக்கலாம்.

** டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் என்னும் முட்டை ஒட்டுண்ணி அட்டைகளை ஒரு ஏக்கருக்கு 2 மிலி என்ற வீதத்தில் நடவு செய்து 25, 40 மற்றும் 55ம் நாளில் கட்டவேண்டும்.

** வளர்ச்சிப்பருவத்தில் பொருளா தார சேதநிலை 10 சதத்தையும் பூக்கும் தருணத்தில் 5 சதத்திற்கும் அதிகமாகும் பொழுது வேப்பங்கொட்டைச்சாறு 5 சத கரைசலை தெளிக்க வேண்டும்.

** தாக்குதல் தீவிரமடையும் சமயங்களில் டைக்குளோர்வாஸ் எக்டருக்கு 100 மிலி மருந்தை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு தெளித்து கட்டுப்படுத்தலாம்.

3.. நெல்குருத்துப்பூச்சி (தண்டு துளைப்பான்):

அறிகுறிகள்:

** பயிரின் தூர் கட்டும் பருவத்தில் நடுக்குருத்து வாடல்; கதிர்வரும் தருணத்தில் வெண்கதிர்.

கட்டுப்படுத்தும் முறைகள்:

** அறுவடைக்குப்பின் எஞ்சியிருக்கும் தாள்களை சேகரித்து அழிப்பதன் மூலம் உறக்கநிலையில் இருக்கும் குருத்துப் பூச்சிகளின் புழுக்கள் மற்றும் கூட்டுப் புழுக்களையும் அழிக்க முடியும்.

** விளக்குப்பொறியை 1-2மீ உயரத்திற்கு வைத்து குருத்துப்பூச்சி, கதிர் நாவாய்பூச்சி, இலைசுருட்டுப் புழுக்களை கவர்ந்தழிக்கலாம். 

** டிரைக்கோகிரம்மா ஜப்பானிக்கம் என்னும் முட்டை ஒட்டுண்ணி அட்டைகளை ஒரு ஏக்கருக்கு 2 சிசி என்ற அளவில் விதைக்க 45, 55, 65ம் நாளில் வெளியிட்டு கட்டுப்படுத்தலாம்.

4.. நெல் கதிர் நாவாய்ப்பூச்சி:

அறிகுறிகள்:

** நெற்பயிர் பால் பிடிக்கும் தருணத்தில் மணிகள் பால் பிடிக்காமல் பதராகிவிடும். தாக்குதல் தீவிர நிலையை அடையும்பொழுது பயிர் சாவியாகிவிடும்.

கட்டுப்படுத்தும் முறைகள்:

** வயல்களில் உள்ள களைச்செடிகளை அகற்ற வேண்டும். பூச்சிகள் திடீரென்று தோன்றி தாக்காமல் இருக்க, பூச்சிகளை கண்காணிக்க வேண்டும்.

** பூச்சிகள் வயலில் பொருளாதார சேதநிலையை அடையும்பொழுது மட்டும் குயினால்பாஸ் 1.5 லி மருந்தை ஏக்கருக்கு 10 கிலோ வீதத்தில் பூக்கும் தருணத்தில் ஒரு முறையும் ஒரு வாரம் கழித்து இரண்டாவது முறையும் தூவ வேண்டும்.

** வேப்பங் கொட்டை கரைசல் 5 சதம் அல்லது மாலத்தியான் 50சதம் அல்லது மோனோ குரோட்டோபாஸ் 36 சதம் மருந்தில் ஏதேனும் ஒன்றை ஒரு ஏக்கருக்கு 200 மிலி வீதத்தில் தெளித்தும் கட்டுப்படுத்தலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios