Asianet News TamilAsianet News Tamil

தைப்பூச திருவிழா; சொந்த ஊரில் எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினருடன் சாமி தரிசனம்

அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.

தைப்பூச திருவிழாவை ஒட்டி சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி தனது தோட்டத்தில் உள்ள பழனியாண்டவர் முருகன் கோவிலில் வழிபாடு நடத்தினார். தைப்பூச தின நிகழ்வாக நெடுங்குளம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து காவடி மற்றும்  தீர்த்த குடம் ஏந்திய குழுவினரின் ஊர்வலம் நடைபெற்றது. 

இந்த ஊர்வலம் கோவிலை வந்தடைந்த போது, பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தனது குடும்பத்தினருடன் வரவேற்றார். இதனை அடுத்து அவருக்கு பரிவட்டம் கட்டி, மேளதாளங்களுடன் கோவிலுக்கு அழைத்து செல்லப்பட்டார். முருகனுக்கு காவிரி தண்ணீர் மற்றும் இளநீர் அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினருடன் சேர்ந்து முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார். மேலும் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். தைப்பூச திருவிழாவை ஒட்டி அன்னதானமும் வழங்கப்பட்டது.

Video Top Stories