விமானத்தில் செல்போனை ஏன் ஏரோபிளேன் மோடில் வைக்க சொல்கிறார்கள்?
விமானத்தில் செல்போனை ஏன் ஏரோபிளேன் மோடில் வைக்க சொல்கிறார்கள் என்பது பற்றி இங்கு காணலாம்.
இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் செல்போன் இல்லாதவர்களை காண்பது அரிது. எப்போது பார்த்தாலும் செல்ப்போனும் கையுமாக இருப்பவர்கள் கூட சில நேரங்களில் தங்களது செல்போனை ஏரோபிளேன் மோடில் போட்டு விடுவர். இந்த ஏரோபிளேன் மோட் எதற்கான செல்போனில் உள்ளது? விமான ஐகான் போன்று இருக்கும் அதனை விமானத்தில் பயன்படுத்தும் போது ஏன் ஆன் செய்யச் சொல்கிறார்கள்? என்பது பற்றியதுதான் இந்த தொகுப்பு.
விமானத்தில் பறக்கும் போது அந்த மோடில் வைக்க வேண்டும் என்பதற்காகவே கண்டறியப்பட்டதுதான் ஏரோபிளேன் மோட். அதற்குதான் அதற்கு ஏரோபிளேன் மோட் என பெயர் வைத்ததுடன், விமானம் போன்ற ஐகானையும் வைத்துள்ளார்கள்.
விமானத்தில் செல்போன் மட்டுமல்ல லேப்டாப், டேப்லட் என எந்தவொரு எலக்ட்ரானிக் சாதனமாக இருந்தால் அதனை சுவிட்ச் ஆஃப் செய்து விட வேண்டும் அல்லது ஏரோபிளேன் மோடில் வைக்க பயணிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உங்களது செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை ஏரோபிளேன் மோடில் வைக்கும் போது, சிக்னல் பார்கள் விமான ஐகானால் மாற்றப்படும். இது, உங்கள் சாதனத்தின் அனைத்து வயர்லெஸ் இணைப்பையும் துண்டிக்கிறது. உங்கள் சாதனம் செல்லுலார் சிக்னல்களை அனுப்புவதை நிறுத்துகிறது. நீங்கள் அழைப்புகள், குறுஞ்செய்திகள் அல்லது இணைய சேவைகளைப் பெறமாட்டீர்கள். ஏரோபிளேன் மோடானது வைஃபை இணைப்பையும் முடக்குகிறது. இருப்பினும், விமானத்தில் வைஃபை நெட்வொர்க் இருந்தால் ஏரோபிளேன் மோடில் உங்கள் சாதனத்தில் இணையத்தைத் தொடர்ந்து பயன்படுத்தலாம். இணையத்தை அணுக ஏரோபிளேன் மோடிலும் வைஃபையை இயக்கலாம்.
எலக்ட்ரானிக் சாதனங்களிலிருந்து வரும் சிக்னல்கள் விமானத்தின் தகவல் தொடர்பு அமைப்புகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதால், அவற்றை ஏரோபிளேன் மோடில் வைக்க அறிவுறுத்தப்படுகிறது. ஒவ்வொரு எலக்ட்ரானிக் சாதனமும் சக்திவாய்ந்த ரேடியோ அலைகளையும் மின்காந்த குறுக்கீடுகளையும் வெளியிடும். எனவே, விமானம் பறக்கும்போது செல்போனை சிக்கலுடன் பயன்படுத்தினால், விமானத்தின் சிக்னல் அமைப்பில் பாதிப்பு ஏற்படலாம். இதனால் விமானிகள் ரேடார் மற்றும் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொள்வதில் சிரமம் ஏற்படும். எனவே தான் ஏரோபிளேன் மோடு கட்டாயமாக பரிந்துரைக்கப்படுகிறது.
டிசம்பர் 1ஆம் தேதி முதல் என்னென்ன மாறப் போகிறது? அமலுக்கு வரும் புதிய விதிகள்!
அதுமட்டுமல்லாது, நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இந்த ஏரோபிளேன் மோடை பயன்படுத்தலாம். அந்த மோடில் உங்களுக்கு அனைத்து சிக்னல்களும் துண்டிக்கப்படுவதால் பேட்டரி குறையாது. ஒருவேளை உங்களது செல்போன் பேட்டரி குறைவாக இருந்தால், அவசரத் தேவைகளுக்கு அதனை சேமிக்க வேண்டுமெனில், ஏரோபிளேன் மோடை பயன்படுத்தலாம். உங்களுக்கு சிக்னல் கிடைக்கவில்லை என்றால் ஏர்பிளேன் மோடில் போட்டு மீண்டும் அதனை ஆஃப் செய்தால் சிக்னல் கிடைக்கும். சிறிய சிறிய சிக்னல் இடையூறுகள் தீர்க்கப்படும். சார்ஜ் போடும் போது இந்த மோடில் வைத்து சார்ஜ் போட்டால், அனைத்து சிக்னல்களும் துண்டிக்கப்படுவதால் வேகமாக சார்ஜ் ஏறும்.
அதேபோல், முக்கியமான இடங்களில் இருக்கிறீர்கள், உங்களது செல்போன் மின்காந்த அலைகளால் அங்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என கருதினால் அல்லது செல்போன் பயன்படுத்தக் கூடாது, ஆனால், சுவிட் ஆஃப்பும் செய்யக் கூடாது என்றால் கூட, ஏரோபிளேன் மோடில் போட்டு பயன்படுத்தலாம்.