WhatsApp வாட்ஸ்அப் பயனர்களுக்கு முக்கிய எச்சரிக்கை! இந்தியாவில் புதிய சிம் இணைக்கும் விதிமுறை அமலுக்கு வரவுள்ளது. இனி போனில் ஆக்டிவ் சிம் இல்லை என்றால் வாட்ஸ்அப் இயங்காது.

இன்றைய டிஜிட்டல் உலகில் தகவல் பரிமாற்றத்திற்கு கோடிக்கணக்கான இந்தியர்களால் பயன்படுத்தப்படும் முக்கிய செயலியாக வாட்ஸ்அப் (WhatsApp) உள்ளது. பயனர்களின் வசதிக்காக புதிய புதிய அம்சங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வரும் வாட்ஸ்அப், தற்போது பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்திய அரசின் புதிய விதிமுறைகளை அமல்படுத்த தயாராகி வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆம், இனி உங்கள் மொபைல் போனில் ஆக்டிவ் சிம் கார்டு (Active SIM card) இல்லை என்றால், நீங்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியாது என்ற அதிர்ச்சிகரமான, அதேசமயம் பாதுகாப்பான புதிய தொழில்நுட்பத்தை வாட்ஸ்அப் விரைவில் கொண்டுவரவுள்ளது.

தற்போதைய நடைமுறையில் உள்ள ஆபத்து என்ன?

தற்போது நாம் ஒரு மொபைலில் வாட்ஸ்அப்பை இன்ஸ்டால் செய்து, 6 இலக்க ஓடிபி (6-digit OTP code) எண்ணை உள்ளீடு செய்து லாகின் செய்துவிட்டால், அதன் பிறகு அந்த சிம் கார்டு அந்த போனில் இருக்கிறதா அல்லது ஆக்டிவாக உள்ளதா என்பதை வாட்ஸ்அப் கவனிப்பதில்லை. நீங்கள் சிம் கார்டை கழற்றிவிட்டாலும் வைஃபை (Wi-Fi) மூலமாக வாட்ஸ்அப்பை தொடர்ந்து பயன்படுத்த முடியும்.

இந்த எளிய நடைமுறைதான் பல சைபர் குற்றங்களுக்கும் (Cyber fraud), பிஷிங் தாக்குதல்களுக்கும் (Phishing attacks) வழிவகுப்பதாக இந்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் (Ministry of Telecommunications) சுட்டிக்காட்டியுள்ளது. முடக்கப்பட்ட அல்லது வேறு ஒருவருக்கு விற்கப்பட்ட எண்களை வைத்துக்கொண்டு பலர் மோசடியில் ஈடுபட இது ஒரு மிகப்பெரிய ஓட்டையாக உள்ளது.

புதிய "சிம் லிங்கேஜ் விதிமுறை" (SIM Linkage Rule)

இந்த ஓட்டையை அடைக்கும் விதமாக, இந்திய தொலைத்தொடர்பு துறை புதிய சிம் லிங்கேஜ் விதிமுறைகளை (SIM Linkage Rule) வகுத்துள்ளது. இதன்படி, டிஜிட்டல் பாதுகாப்பை பலப்படுத்த, வாட்ஸ்அப் போன்ற தளங்கள் சிம் அடிப்படையிலான சரிபார்ப்பை (SIM-based verification) கட்டாயம் செய்ய வேண்டும்.

இந்த புதிய சட்டத்திற்கு இணங்க, வாட்ஸ்அப் நிறுவனம் தனது தளத்தில் பெரிய மாற்றங்களைச் செய்து வருகிறது. WABetaInfo வெளியிட்டுள்ள தகவலின்படி, ஆண்ட்ராய்டு 2.26.8.6 பீட்டா (Android 2.26.8.6 beta) வெர்ஷனில் இதற்கான சோதனை ஏற்கனவே தொடங்கிவிட்டது.

இனி எப்படி செயல்படும்?

புதிய அப்டேட் அமலுக்கு வந்த பிறகு, வாட்ஸ்அப் பின்னணியில் ஒரு சரிபார்ப்பு செயல்முறையை (Background validation process) தொடர்ந்து நடத்தும். நீங்கள் எந்த சிம் கார்டு எண்ணை வைத்து வாட்ஸ்அப் கணக்கை துவங்கினீர்களோ, அந்த சிம் கார்டு உங்கள் போனில் பௌதீகமாக (Physically) செருகப்பட்டிருக்க வேண்டும் மற்றும் அது ஆக்டிவாக (Active) இருக்க வேண்டும்.

அப்படி ஒருவேளை உங்கள் சிம் கார்டு போனில் இல்லை என்றாலோ அல்லது நெட்வொர்க் சேவை துண்டிக்கப்பட்டு ஆக்டிவாக இல்லை என்றாலோ, உங்களின் வாட்ஸ்அப் கணக்கு லாக்-அவுட் (Log-out) ஆகிவிடும் அல்லது வேலை செய்யாமல் முடங்கிவிடும். இது நடைமுறைக்கு வரும்போது, மோசடி நபர்களால் போலியான எண்களை வைத்துக்கொண்டு வாட்ஸ்அப்பில் குற்றங்களைச் செய்ய முடியாது. சாதாரண பயனர்களுக்கான டிஜிட்டல் பாதுகாப்பு இதன் மூலம் மேலும் உறுதியாக்கப்படும்!