ChiChi Call வைரல் வீடியோ என்ற பெயரில் பரவும் போலி லிங்குகளை நம்பாதீர்கள். இது உங்கள் தனிப்பட்ட தரவுகளை திருடும் Ghost File மோசடியாகும். உங்கள் பேங்க் அக்கவுண்ட் காலி!
சமூக வலைத்தளங்களில் தினந்தோறும் பல வீடியோக்கள் வைரலாவது வழக்கம். ஆனால், தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ள "ChiChi Call" வைரல் வீடியோ என்ற ட்ரெண்ட், உண்மையில் ஒரு மிகப்பெரிய சைபர் மோசடி என்பது பலருக்கும் தெரியாது. பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல இன்ஃப்ளூயன்சர் வேரா ஹில் (Vera Hill) தொடர்புடைய கசிந்த வீடியோ என்ற பெயரில் இந்த மோசடி வலைப்பின்னல் அரங்கேறி வருகிறது.
நீங்கள் பேஸ்புக், டிக்டாக், ரெட்டிட் அல்லது டெலிகிராம் போன்ற தளங்களில் இந்த வீடியோவுக்கான லிங்கை பார்த்தால், உடனே அதை கடந்து செல்வது நல்லது. ஆர்வக் கோளாறில் அந்த லிங்கை கிளிக் செய்தால், உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி விவரங்கள் திருடப்படும் பெரும் அபாயம் உள்ளது.
Ghost File மோசடி என்றால் என்ன?
சைபர் பாதுகாப்பு நிபுணர்களின் கூற்றுப்படி, இது ஒரு வகையான 'கோஸ்ட் ஃபைல்' (Ghost File) மோசடியாகும். உண்மையில், வேரா ஹில் தொடர்பான எந்தவொரு சர்ச்சை வீடியோவும் இணையத்தில் எங்குமே இல்லை. போலியான தகவல்களையும், எடிட் செய்யப்பட்ட வீடியோக்களையும் பரப்பி, மக்களை அந்த லிங்கை கிளிக் செய்ய வைப்பதே இந்த ஹேக்கர்களின் முக்கிய நோக்கமாகும்.
இதற்கு முன்னதாக, "பினாய் கோல்ட் மெடலிஸ்ட்" என்ற பெயரில் ஜியான் கப்ரேரா (Zyan Cabrera) என்பவரை வைத்து இதேபோன்ற ஒரு மோசடியை இந்த சைபர் குற்றவாளிகள் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்போது அதே தந்திரத்தை "ChiChi Call" என்ற பெயரில் மீண்டும் கையில் எடுத்துள்ளனர்.
உங்களை எப்படி வலையில் வீழ்த்துகிறார்கள்?
இந்த மோசடி கும்பல் 'SEO Poisoning' என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தேடுபொறிகளில் (Search Engines) "ChiChi video call full", "ChiChi Vera Hill viral link" போன்ற வார்த்தைகளை அதிகம் பயன்படுத்தி போலியான இணையதளங்களை முதல் பக்கத்திற்கு கொண்டு வருகிறார்கள்.
நீங்கள் அந்த போலி லிங்கை கிளிக் செய்தவுடன், உங்களின் IP முகவரி உடனடியாக கண்காணிக்கப்படும். பின்னர், வீடியோவை பார்க்க உங்கள் வயதை சரிபார்க்க வேண்டும் என்று கூறி, அச்சு அசலாக பேஸ்புக் (Facebook) போலவே இருக்கும் ஒரு போலியான லாகின் பக்கத்திற்கு உங்களை அழைத்துச் செல்வார்கள். அங்கே நீங்கள் உங்கள் ஐடி மற்றும் பாஸ்வேர்டை உள்ளீடு செய்தால், அடுத்த நொடியே உங்கள் கணக்கு ஹேக்கர்களின் கைக்கு சென்றுவிடும்.
மால்வேர் ஆபத்தும் சட்ட சிக்கல்களும்
சில நேரங்களில், வீடியோவை ப்ளே செய்ய ஒரு 'பிரவுசர் பிளக்கின்' (Browser Plugin) அல்லது எக்ஸ்டென்ஷனை இன்ஸ்டால் செய்யும்படி திரையில் தோன்றும். அது ஒரு வீடியோ பிளேயர் அல்ல, மாறாக உங்கள் மொபைல் அல்லது கம்ப்யூட்டரில் நீங்கள் டைப் செய்யும் பாஸ்வேர்டுகளை பதிவு செய்து, வங்கி விவரங்களை திருடும் கொடிய மால்வேர் (Malware) ஆகும்.
மேலும், இதுபோன்ற போலி வீடியோக்களையோ அல்லது அந்தரங்க வீடியோக்களையோ பகிர்வது இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 (IT Act 2000) மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) ஆகியவற்றின் கீழ் கடுமையான குற்றமாகும். எனவே, இதுபோன்ற வைரல் லிங்குகளை கிளிக் செய்வதையோ அல்லது மற்றவர்களுக்கு வாட்ஸ்அப்பில் பகிர்வதையோ முற்றிலுமாக தவிர்க்கவும். தேவையற்ற லிங்குகளை தவிர்க்கவும்; டிஜிட்டல் உலகில் பாதுகாப்பாக வலம் வருவோம்!


