Scam Alert e-SIM மோசடி மூலம் பெண் ஒருவர் ரூ.11 லட்சத்தை இழந்துள்ளார். சிம் ஸ்வாப் மோசடி எப்படி நடக்கிறது? உங்கள் பணத்தைப் பாதுகாப்பது எப்படி? முழு விவரம் உள்ளே.

மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது மொபைல் நெட்வொர்க் திடீரென துண்டிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே தனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.11 லட்சத்தை இழந்துள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் e-SIM மோசடி மூலம் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் (I4C) பொதுமக்களை எச்சரித்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

e-SIM மோசடி: ஒரு புதிய அச்சுறுத்தல்

பொதுவாக நமது மொபைல் நெட்வொர்க் வேலை செய்யவில்லை என்றால், அது தொழில்நுட்பக் கோளாறு என்று நினைப்போம். ஆனால், சைபர் குற்றவாளிகள் இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி பணத்தைத் திருடுகின்றனர். இந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணின் மொபைல் எண் சைபர் குற்றவாளிகளால் e-SIM ஆக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்தப் பெண்ணின் மொபைல் எண் குற்றவாளிகளின் கட்டுப்பாட்டிற்குச் சென்றுள்ளது.

மோசடி நடப்பது எப்படி?

தொலைத்தொடர்பு நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து பேசுவது போல் மோசடி கும்பல் நம்மைத் தொடர்புகொள்ளும். "உங்கள் சிம் கார்டை அப்டேட் செய்ய வேண்டும்" அல்லது "நெட்வொர்க் பிரச்சனையைச் சரிசெய்ய e-SIM ஆக மாற்ற வேண்டும்" என்று கூறி நம்மை நம்ப வைப்பார்கள். நாம் தரும் தனிப்பட்ட விவரங்களை வைத்து, அவர்கள் நம் பெயரிலேயே ஒரு புதிய e-SIM-ஐ ஆக்டிவேட் செய்துவிடுவார்கள். பழைய சிம் செயலிழந்துவிடும்.

வங்கி கணக்கு காலி

புதிய e-SIM ஆக்டிவேட் ஆனவுடன், வங்கி OTPகள் உட்பட அனைத்து தகவல்களும் குற்றவாளிகளின் மொபைலுக்குச் செல்லும். மும்பையில் நடந்த இந்த சம்பவத்தில், குற்றவாளிகள் பெண்ணின் மொபைல் எண்ணைக் கைப்பற்றி, வங்கி OTP-க்களைப் பெற்று, சில நிமிடங்களில் ரூ.11 லட்சத்தைத் திருடியுள்ளனர்.

தப்பிப்பது எப்படி?

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒருபோதும் வாடிக்கையாளர்களை அழைத்து சிம் கார்டை அப்டேட் செய்யச் சொல்வதில்லை. நெட்வொர்க் பிரச்சனை இருந்தால் நீங்களே நேரடியாக கஸ்டமர் கேரை அழைக்கவும் அல்லது அருகிலுள்ள ஷோரூமுக்குச் செல்லவும். 1600 (வங்கி) அல்லது 140 (மார்க்கெட்டிங்) எனத் தொடங்கும் எண்களைத் தவிர்த்து, சாதாரண 10 இலக்க எண்களில் இருந்து வரும் இது போன்ற அழைப்புகளை நம்ப வேண்டாம். சந்தேகம் இருந்தால் உடனே 1930 என்ற எண்ணில் சைபர் கிரைம் புகாரளிக்கவும்.