சுமாரான போட்டோவையும் சூப்பராக மாற்றலாம்! இன்ஸ்டாகிராமில் கலர் கலரா புதிய ஃபில்டர்ஸ் அறிமுகம்!
இன்ஸ்டாகிராம் நீண்ட காலத்திற்குப் பிறகு புகைப்படங்களைப் பகிர்பவர்களுக்கு, 25 புதிய போட்டோ ஃபில்டர்களை வழங்கியுள்ளது.
இன்ஸ்டாகிராம் முதலில் புகைப்படங்களைப் பகிர்வதற்காகத் தொடங்கப்பட்டது. ஆனால், படிப்படையாக ஸ்டோரீஸ், ரீல்ஸ் என வீடியோக்கள் அதிகம் பகிரப்படும் தளமாக மாறியுள்ளது. இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களைப் பகிர்வதை விரும்பும் பயனர்களுக்கு புதிய அப்டேட் ஒன்று வந்திருக்கிறது.
இப்போது புகைப்படங்களைப் பகிர்பவர்களுக்கு, இன்ஸ்டாகிராம் 25 புதிய போட்டோ ஃபில்டர்களை வழங்கியுள்ளது. “புகைப்படங்களுக்கான ஃபில்டர்களை நாங்கள் புதுப்பித்து நீண்ட நாட்களாகிவிட்டது. எனவே, புதிய ஃபில்டர்களை இப்போது சேர்க்கிறோம் ” என்று இன்ஸ்டாகிராமின் தலைவரான ஆடம் மொசெரி வெளியிட்டுள்ள ரீல் பதிவு ஒன்றில் கூறியுள்ளார்.
புதிய போட்டோ ஃபில்டர்கள் மூலம் இன்ஸ்டா பயனர்கள் தங்கள் பதிவுகளுக்கு வெவ்வேறு விதமான தோற்றத்தைக் கொடுக்கலாம். நுட்பமான வண்ண மாற்றங்கள் செய்யும் ஃபில்டர்கள் பல இதில் உள்ளன. எந்த ஃபில்டரையும் தேவையான அளவுக்கு பயன்படுத்த வழக்கம்போல ஸ்லைடரைப் பயன்படுத்தலாம்.
படத்தின் நிறத்தை மாற்றாமல் இருக்க wide angle, wavy போன்ற சில ஃபில்டர்களை பயன்படுத்தலாம். இதைத் தவிர colour leak, zoom blur போன்ற பிற ஃபில்டர்களும் உள்ளன. அவற்றையும் இன்ஸ்டா பயனர்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.
ரீல் பதிவுகளை விரும்பும் இன்ஸ்டா ரசிகர்களுக்கு புதிய எடிட்டிங் கருவிகளும் விரைவில் வரவுள்ளன. அவை தங்கள் ரீல்களில் தனிப்பட்ட கிளிப்களை பெரிதாக்கவும், சுழற்றவும் பயன்படும். undo மற்றும் redo அம்சங்களையும் கொண்டுவர இன்ஸ்டாகிராம் முயற்சி செய்துவருகிறது. இதுவும் விரைவில் வெளியிடப்படும்.
மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாடுகளில் மெகாஃபோன், மான்ஸ்டர், ரேடியோ உள்ளிட்ட 10 புதிய ஆங்கில வாய்ஸ் டூ ஸ்பீச் குரல் ஃபில்டர்களும் அறிமுகமாக உள்ளன.