ஸ்ரீவைகுண்டத்தில் அரசு பேருந்து மோதியதில் பெண் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்குள்ளான பெண்ணின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு பேருந்து மோதி விபத்து
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சந்தையடி தெருவை சேர்ந்த மாடசாமி மனைவி மாடத்தி (55). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மாடசாமி கொத்தனார் கூலி வேலைக்கும் மாடத்தி சலவை தொழிலாளியாகவும் உள்ளார். இந்நிலையில், மாடத்தி ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையம் நோக்கி செல்லும் வழியில் உள்ள நான்கு முக்கு சந்தையில் சென்று கொண்டு இருந்துள்ளார். அப்போது, அவரது பின்னால் வந்த திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி செல்லும் அரசு பேருந்து எதிர்பாராத விதமாக மோதியதில் தடுமாறி கீழே விழுந்த மாடத்தின் மீது அரசு பேருந்து பின் சக்கரம் ஏறி இறங்கியுள்ளது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
உடனடியாக அருகில் உள்ள ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாடத்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை
இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் பழைய தாலுகா அலுவலகம் அருகே உள்ள நான்கு மூக்கு சந்தையில் போக்குவரத்து நெருக்கடியை சரி செய்ய வேண்டும் எனவும் அங்குள்ள மின்கம்பத்தை இடமாற்ற வேண்டும் எனவும் பொதுமக்கள் பல வருடங்களாக போராடி வரும் நிலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலம் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை என குற்றம்சாட்டினர்.
பொதுமக்கள் சாலை மறியல்
விபத்தில் இறந்த மாடத்தி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை முன்பு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை தாசில்தார் சமாதானம் செய்து வைத்தார்.
