மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கந்த சஷ்டி கவசம் குறித்து பேசியுள்ளார். முருகனை வணங்குவது குறித்தும், ஆன்மீகத்திற்கும் அரசியலுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் விளக்கியுள்ளார்.

மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடு கண்காட்சியில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து முருகன் பாடல் ஒன்று வெளியிட்டார். அவருடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், இந்து முன்னணி அமைப்பின் தலைவர் காடேசுவர சுப்பிரமணியன் உடனிருந்தனர்.

ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்

இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்: ஆன்மீகமும் அரசியலும் தமிழகத்தில் ஒன்றாக இணைந்து இருக்கிறது. யாரெல்லாம் ஆன்மீகத்திற்கு எதிராக பேசி ஆட்சிக்கு வந்தார்களோ அவர்கள் தான் இப்போது மீண்டும் அதையே சொல்கிறார்கள். முருகனை தேவையில்லாமல் யாரும் தொடக்கூடாது என்பதை சொல்வதற்கு தான் இந்த மாநாடு. முருகனை கும்பிட்டால் மத கலவரம் வரும் என்றால், இயேசு, அல்லாவை கும்பிட்டால் வராதா? அவரவர் தெய்வத்தை உரிமையுடன் கும்பிட அரசியல் சாசனம் இடமளித்துள்ளது.

கந்த சஷ்டி கவசத்தை எதற்காக வசை பாடினார்கள்?

அரசியல் கட்சிகள் கடவுளை பயன்படுத்திக் கொள்வதற்கு அரசியல் சாசனத்தில் எதுவும் சொல்லப்படவில்லை. அதற்காக, தமிழ்நாட்டில் முருகனை எவ்வளவு வேண்டுமானாலும் வசை பாடுவீர்களா? அதை பார்த்துகொண்டு இருக்க வேண்டுமா? கந்த சஷ்டி கவசத்தை எதற்காக வசை பாடினார்கள்? அதற்காக தான் முருகன் வேலை தூக்கிக்கொண்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் போனார்.

தேவரை மதிக்கிறார்களோ முருகனையும் வணங்குவார்கள்

முருக பக்தர்களின் முதன்மையானவர் முத்துராமலிங்க தேவர். தேவரை யாரெல்லாம் மதிக்கிறார்களோ அவர்கள் முருகனையும் வணங்குவார்கள். தமிழக இந்து அறநிலையத்துறை சார்பில் மகாராஷ்டிரத்தில் கூட இதே போல ஒரு விழாவை ஏற்பாடு செய்ய வேண்டும். நானும் உடன் இருப்பேன். இறைவனை வழிபடுவதற்கு மொழி தேவையில்லை. அது தமிழோ, சமசுகிருதமோ எதுவாக இருந்தாலும் சரியே என கூறினார். இந்து முன்னணி சார்பில் மதுரையில் நடத்தப்படும் முருகர் பக்தர்கள் மாநாடு இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. ஐந்து லட்சம் பேர் வரை வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.