தமிழ்நாட்டில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மேற்கு வங்கத்தை சேர்ந்தவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

West Bengal man arrested for paliyal vankodumai a 10 year old girl: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகாவில் இருக்கும் ஒரு கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி, பாட்டி வீட்டில் தங்கி பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 4ம் தேதி அந்த சிறுமி பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்றபோது மர்ம நபர் ஒருவன், சிறுமியின் வாயை கைகளால் பொத்தி அருகே இருந்த மாந்தோப்புக்குள் தூக்கி சென்று பாலியல் தொல்லை கொடுத்து தப்பிச்சென்றான். அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து உறவினர்களிடம் அழுது கொண்டே தெரிவித்தாள்.

சிறுமி பாலியல் வன்கொடுமை

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ஆரம்பாக்கம் போலீசில் புகார் அளித்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது வடமாநில இளைஞன் ஒருவன் சிறுமியை தூக்கிச்செல்வது பதிவாகி இருந்தது. ''எனது மகளை அடித்து துன்புறுத்திய அவன் வாய் எல்லாம் ரத்தம் வர வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்'' என்று சிறுமியின் தாய் கண்ணீர் மல்க பேசி இருந்தார்.

குற்றவாளியை பிடிக்க திணறிய போலீஸ்

இதில் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். இந்த சம்பவம் நடந்து 13 நாட்கள் ஆன நிலையில் குற்றவாளி கைது செய்யப்படாதது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை தேடி வருவதாக போலீசார் தெரிவித்து இருந்தனர். குற்றவாளியை கண்டுபிடிக்க தனிப்படையில் கூடுதல் போலீசார் சேர்க்கப்பட்டனர்.

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவன் கைது?

இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு முற்றிலுமாக சீரழிந்து விட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், சிறுமியை சீரழித்த மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவனை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிக்கியது எப்படி?

ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரன் கைது செய்யப்பட்டதாகவும், அவனிடம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தில் அவன் அதே உடை அணிந்து வந்தபோது போலீசாரிடம் சிக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீவிர விசாரணைக்கு பிறகே முழுமையான விவரங்கள் தெரியவரும்.