கரூரில் கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்தது குறித்து, விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு, அண்ணாமலைக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். விஜய் குறித்த நேரத்திற்கு வராததே உயிரிழப்புகளுக்கு முக்கியக் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிரிழப்புகளுக்குக் காரணமாக இருந்தது கூட்டத்தை நடத்தியவர்கள் தானா அல்லது விஜய்யின் வருகை தாமதமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். “60,000 பேர் நிற்கக்கூடிய இடத்தில் 10,000 பேர் மட்டுமே வருவார்கள் என காவல்துறையில் எழுதிக்கொடுத்தது யார்?” என்று வன்னி அரசு சந்தேகத்தைக் கிளப்பியுள்ளார்.

39 சாவுகளுக்கு யார் காரணம்?

மேலும், "நாமக்கல்லில் பேசுவதற்கு ஒப்புக்கொண்ட நேரம் காலை 8.45 மணி. ஆனால் சென்னை விமான நிலையத்திலிருந்தே கிளம்பியது 8.45-க்கு தான். நாமக்கல்லை சேர்ந்தது 2.30 மணிக்கு வந்தடைந்தார். கரூரில் பேச வருவதாக அறிவிக்கப்பட்ட நேரம் பகல் 12 மணிக்கு. ஆனால் அவர் வந்து சேர்ந்ததோ இரவு 7 மணிக்கு தான். இப்போது சொல்லுங்கள் அண்ணாமலை அவர்களே, இந்த 39 சாவுகளுக்கும் யார் காரணம்? குறித்த நேரத்தில் விஜய் வராமல் போனதற்கு யார் காரணம்?" என்று அண்ணாமலைக்கு சவால் விடுத்திருக்கிறார்.

கூட்ட நெரிசலுக்கும், உயிரிழப்புகளுக்கும், விஜய் குறித்த நேரத்தில் கூட்டங்களுக்கு வராததே முக்கியக் காரணம் என்று குற்றம் சாட்டும் வகையில் வன்னி அரசு இந்தக் கேள்விகளை முன்வைத்துள்ளார். இந்தப் பிரசார தாமதத்திற்குக் காரணமானவர்கள் யார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.