Asianet News TamilAsianet News Tamil

BJP : மத்திய அமைச்சரவையில் வாரிசுகள்..! வாரிசு அரசியல் என்றால் என்ன.? புதிய விளக்கம் அளித்த வானதி சீனிவாசன்

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு போன்ற முக்கிய கூட்டங்களில் சோனியா, ராகுல் பிரியங்கா என்று குடும்பத்தினர் தான் அமர்ந்திருக்கின்றனர். இது போன்ற காட்சியை ஒரு நாளும் பாஜகவில் பார்க்க முடியாது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

Vanathi Srinivasan has explained Rahul Gandhi question regarding succession politics kak
Author
First Published Jun 12, 2024, 8:58 AM IST

வாரிசு அரசியல்

மத்திய அமைச்சரவையில் வாரிசுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டிருந்தார். இந்தநிலையில் பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கட்சித் தலைமைக்கும், ஆட்சித் தலைமைக்கும் ஒரு குடும்பத்தினரைத் தவிர வேறு யாரும் வரமுடியாது என்ற நிலை தான் வாரிசு அரசியல். அரசியலில் இருக்கும் ஒருவரது மகனோ, மகளோ, குடும்பத்தினரோ அரசியலுக்கு வரக் கூடாது என்று சொல்ல முடியாது. காங்கிரஸ் கட்சிக்குள் நேரு குடும்பத்தினர் அல்லாத ஒருவர் முடிவெடுக்க முடியுமா என்பதற்கு ராகுல் காந்தி விளக்கம் அளிக்க வேண்டும்.

எல்லாரும் 'மோடியின் குடும்பம்' என்பதை அகற்றுங்கள்: மோடி போட்ட திடீர் உத்தரவு ஏன்?

முதலில் 'வாரிசு அரசியல்' என்றால் என்ன என்பதை ராகுல் காந்தி புரிந்து கொள்ள வேண்டும். அரசியலில் இருக்கும் ஒருவரது மகனோ, மகளோ, குடும்பத்தினரோ அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது.  வாக்களிக்கும் தகுதி கொண்ட இந்திய குடிமகன் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். தேர்தலில் போட்டியிடலாம். எந்தப் பதவிக்கும் வரலாம். இது இந்திய அரசியலமைப்பு சட்டம் அளித்திருக்கும் அடிப்படை உரிமை. ஆனால், ஒரு குடும்பத்தினர் ஒரு கட்சியையோ, அரசையோ தொடர்ந்து கட்டுக்குள் வைத்திருப்பது தான் வாரிசு அரசியல். அதை தான் பாஜக எதிர்க்கிறது. இந்தியா விடுதலை அடைந்து, நமக்கென்ன ஒரு அரசை உருவாக்கிக் கொண்ட 1947-ம் ஆண்டுக்குப் பிறகு, கடந்த 77 ஆண்டுகளாக  பண்டிட் ஜவஹர்லால் நேரு, அவரது மகள் இந்திரா காந்தி, அவரது மகன்  ராஜிவ் காந்தி, அவரது மனைவி சோனியா காந்தி, அவர்களது மகன் ராகுல் காந்தி என்று ஒரு குடும்பத்தினர் கட்டுப்பாட்டில் தான் காங்கிரஸ் கட்சி இருந்து வருகிறது

தனியாக கட்சி தொடங்கிய தலைவர்கள்

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் போதெல்லாம், நேரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக இருப்பார். அல்லது நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பிரதமரை கட்டுப்படுத்தும் இடத்தில் இருப்பார்கள்.  2004 முதல் 2014 வரை 10 ஆண்டுகள் மன்மோகன் சிங் பொம்மை பிரதமராக இருந்தது அனைவருக்கும் தெரியும். அந்த 10 ஆண்டுகளும் உண்மையிலேயே அதிகாரம் செலுத்தியது சோனியா காந்தி, ராகுல் காந்தி என்பது அனைவருக்கும் தெரிந்த ரகசியம் தான். 1989க்கு பிறகு காங்கிரஸ் கட்சியை  மக்கள் புறக்கணித்தே வருகின்றனர். இதற்கு அக்கட்சி ஒரு குடும்பத்தின் பிடியில் இருப்பதே காரணம். சோனியா குடும்பத்திற்கு அடிமையாக இருக்க பிடிக்காமல் தான், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரத்தில் சரத் பவார், ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் தனிக்கட்சி தொடங்கி காங்கிரஸ் கட்சியையே தோற்கடித்தனர். தனித்து கட்சி தொடங்கி காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்கும் அளவுக்கு வல்லமை பெற்ற இந்த தலைவர்களால், காங்கிரஸ் கட்சிக்குள் இருந்து சாதிக்க முடியாமல் போனதற்கு ஒற்றைக் குடும்பத்தின் ஆதிக்கம் தான் காரணம். இதுதான் வாரிசு அரசியல். குடும்ப அரசியல். இதைதான் பாஜக எதிர்க்கிறது. இனியும் எதிர்க்கும்.

BJP : "கலவரம் செய்தால் தான் பாஜக வெற்றி பெற முடியும்" இந்து மக்கள் கட்சி நிர்வாகியை தட்டி தூக்கிய போலீஸ்

49 ஆண்டு காலம் திமுக என்ற கட்சியை  தனது பிடிக்குள் வைத்திருந்த கருணாநிதி மறைந்ததும், அவரது மகன் மு.க. ஸ்டாலினிடம் அக்கட்சி சென்று விட்டது. மு.க.ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், சரத் பவர், உத்தவ் தாக்கரே என்று 'இண்டி' கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகளை ஒரு குடும்பத்தினர் தான் கட்டுப்படுத்துகின்றனர். அந்த குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு தகுதி இருக்கிறதோ, இல்லையோ அவர்தான் அக்கட்சியின் அடுத்த தலைவராக முடிகிறது. ஆட்சி அமைத்தல் முதலமைச்சராக முடிகிறது.  திமுக தலைவராக துரைமுருகனும், முதலமைச்சராக ஆ.ராசாவும் இருந்து அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக, அமைச்சராக மு.க. ஸ்டாலின் இருந்தால் அது வாரிசு அரசியல் அல்ல. ஆனால், அதற்கு நேர் மாறாக 'கருணாநிதி - ஸ்டாலின் - உதயநிதி' அதாவது 'தந்தை - மகன் - பேரன்' என்று கட்சியை, ஆட்சியை  கைப்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் அண்ணா காலத்திலிருந்து அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் துரைமுருகன் போன்ற மூத்த தலைவர்கள் கூட, உதயநிதிக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியிருக்கிறது.  இந்த அவலத்தை தான் பாஜக எதிர்க்கிறது.


கண்ணாடி வீட்டில் இருந்து கல் எரிவதா.?

காங்கிரஸ் கட்சியில் நேரு குடும்பத்தைச் சாராத ஒருவரால் எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியுமா என்பதற்கு ராகுல் காந்தி விளக்கம் அளிக்க வேண்டும். ஏனெனில், மல்லிகார்ஜுன கார்கேவை தலைவராக்கி விட்டு, வேட்பாளர் தேர்வு முதல் அனைத்து முடிவுகளையும் சோனியா, ராகுல், பிரியங்கா  தான் எடுத்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு போன்ற முக்கிய கூட்டங்களில் சோனியா, ராகுல் பிரியங்கா என்று குடும்பத்தினர் தான் அமர்ந்திருக்கின்றனர். இது போன்ற காட்சியை ஒரு நாளும் பாஜகவில் பார்க்க முடியாது. பாஜகவில் வாரிசு அரசியல் இருப்பதாகக் கூறுவது, கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல்லெறிவது போன்றது. பாஜகவை நோக்கி வாரிசு அரசியல் என்று ராகுல் காந்தி வைக்கும் விமர்சனத்தை பார்த்து மக்கள் சிரிக்கத்தான் செய்வார்கள் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios