திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி பிரிட்டோ.  இவரது 2 வயது மகன் சுஜித் வில்சன்.  கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் சொந்த நிலத்தில் தோண்டப்பட்டு, சரியாக மூடப்படாமல் விடப்பட்ட ஆழ்துளை கிணற்றுக்குள்  கடந்த வெள்ளிக்கிழமை தவறி விழுந்து விட்டான்.

88 அடி ஆழத்திற்கு சென்ற அவனை மீட்பதற்காக ரிக் இயந்திரம் உதவியுடன் மற்றொரு குழி தோண்டப்பட்டு வருகிறது.  இதன்படி, சுஜித் விழுந்த ஆழ்துளை கிணறு அருகே 2 மீட்டர் தொலைவில் 1 மீட்டர் அகலம், 110 அடி ஆழத்தில் குழி ஒன்று தோண்டப்பட்டு, அதில் இருந்து சுரங்கம் மூலம் ஆழ்துளை கிணற்றுக்குள் செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது.

இதுவரை 73 மணிநேரத்திற்கும் மேலாக மீட்பு பணி நடந்து வருகிறது.  இதனிடையே, அந்த பகுதியில் லேசான மழை பெய்து வருகிறது.  இதனால் குழி தோண்டும் பணியில் சற்று தொய்வு ஏற்பட்டது.  எனினும், மீட்பு பணி தொடருகிறது.

இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பதிவில்,  ஊர்ஒலகம் காத்திருக்கு உறவாட வாமகனே…. ஒரேஒரு மன்றாட்டு உசுரோட வாமகனே என்று குழந்தை சுஜித் மீண்டு வரவேண்டும் என கவிதை வரிகளில் தெரிவித்து உள்ளார்.