காங்கிரஸ் திமுகவை விட்டு எங்கும் போகாது என்று தமிழக முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மறைமுகமாக கூறியுள்ளார். கை நம்மை விட்டு எங்கும் போகாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
கரூர் துயர சம்பவத்தை தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தவெக தலைவர் விஜய்க்கு போன் செய்து பேசினார். விஜய்யுடன் ராகுல் காந்தி 15 நிமிடங்கள் பேசியதால் தவெக காங்கிரஸ் கூட்டணி அமைய போகிறதா? என்ற பேச்சு எழுந்தது. இதற்கு அச்சாரம் போடும் விதமாக டெல்லியில் முகாமிட்டுள்ள ஆதவ் அர்ஜூனா சில காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகின.
திமுக கையை விட்டு போகும் காங்கிரஸ்
மேலும் தவெகவுக்கு திமுக நெருக்கடி கொடுக்கும் நிலையில், ராகுல் காந்தியை வைத்து இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டி விடலாம் என விஜய் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் கூறின. மேலும் திமுக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசுக்கு சரி பாதி தொகுதிகள் வேண்டும். ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் பலர் பேசினார்கள். இதனால் காங்கிரஸ் திமுக கையை விட்டு தவெக பக்கம் தஞ்சம் அடைய போவதாக அரசியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.
காங்கிரஸ் தலைவர்கள் மறுப்பு
அதே வேளையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி தவெக, காங்கிரஸ் கூட்டணியை திட்டவட்டமாக மறுத்தனர். கரூர் பிரச்சனைக்காகத்தான் ராகுல் காந்தி விஜய்யுடன் பேசினார். அதில் வேறு எந்த அரசியலும் பேசவில்லை. தமிழகத்தில் திமுக, காங்கிரசுக்கு அதிக வாக்கு வங்கி உள்ளது. திமுகவுடன் எங்களுக்கு கொள்கை கூட்டணி உள்ளது. அத்துடன் இது வெற்றி கூட்டணி என்று தெரிவித்தனர்.
உதயநிதி ஸ்டாலினின் சூசக பேச்சு
இந்நிலையில், காங்கிரஸ் என்றும் நம்மை விட்டு போகாது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சூசகமாக தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் ஒரு திருமண விழாவில கலந்து கொண்ட உதயநிதி பேசுகையில், ''திண்டுக்கல்லில் எங்கு சென்றாலும் எனக்கு உற்சாக வரவேற்பு கிடைத்தது. மக்கள் எழுச்சியை பார்க்க முடிந்தது. இங்கு எனது வாகனத்தை விட்டு வரும்போது கூட உங்களின் அன்பான வரவேற்பையும் எழுச்சியையும் பார்த்து விட்டு தான் வந்திருக்கிறேன்.
கை நம்மை விட்டு போகாது
முழுசாக மேடைக்கு வந்து சேர்ந்து விடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு குறைவாக தான் இருந்தது. முழுதாக வருவேனா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் என்றைக்குமே கை நம்மை விட்டு போகாது. நான் என்னுடைய கையை சொன்னேன். உங்கள் மீது இருக்கக் கூடிய நம்பிக்கை அதையும் சேர்த்து தான் சொன்னேன்'' என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் திமுகவை விட்டு வெளியேறாது என்பதை மறைமுகமாக குறிப்பிடும் வகையில் தான் உதயநிதி கை நம்மை விட்டு போகாது என்று கூறியுள்ளார் என்று அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கை காங்கிரஸ் கட்சியின் தேர்தல் சின்னம் என்பது குறிப்பிடத்தக்கது.
