- Home
- Tamil Nadu News
- காங்கிரஸ்-தவெக கூட்டணி? விஜய்யுடன் ராகுல் காந்தி பேசியது 'இதுதான்'.. உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.அழகிரி!
காங்கிரஸ்-தவெக கூட்டணி? விஜய்யுடன் ராகுல் காந்தி பேசியது 'இதுதான்'.. உண்மையை போட்டுடைத்த கே.எஸ்.அழகிரி!
விஜய்யுடன் ராகுல் காந்தி பேசியது என்ன? தமிழகத்தில் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி சேரப் போகிறதா? என்பது குறித்து கே.எஸ்.அழகிரி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.

கரூர் துயர சம்பவம்
கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுடனும், விஜய்யுடனும் தொலைபேசியில் பேசி ஆறுதல் கூறியுள்ளார். விஜய்யுடன் மட்டும் ராகுல் காந்தி 15 நிமிடங்கள் பேசியதால் தவெக காங்கிரஸ் கூட்டணி அமைக்க போகிறதா? என்ற கேள்வி எழுந்தது.
தவெக பக்கம் சாயும் காங்கிரஸ்
ஏற்கெனவே தமிழகத்தில் காங்கிரஸ் திமுக கூட்டணி வைத்துள்ள நிலையில், சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசுக்கு சரி பாதி தொகுதிகள் வேண்டும். ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் பலர் தொடர்ந்து பேசி வருகின்றனர். தமிழகத்தில் காங்கிரசுக்கு திமுகவை விட்டால் வேறு சாய்ஸ் இல்லாமல் இருந்து வந்த நிலையில், இப்போது தவெக அவர்களுக்கு சரியான தேர்வாக அமைந்துள்ளது.
காங்கிரஸ் தலைவர்கள் விளக்கம்
தவெக பக்கம் இளைய தலைமுறை வாக்குகள், பெண்கள் வாக்குகள் இருப்பதால் காங்கிரஸ் திமுகவை கைவிட்டு விஜய் நோக்கி திரும்பலாம் என அரசியல் நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். அதே வேளையில் 'ராகுல் காந்தி விஜய்யுடன் பேசியது கரூர் சம்பவம் குறித்து தான். காங்கிரஸ் திமுக கூட்டணி என்பதில் எந்த மாற்றமும் இல்லை' என காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அரசியல் இல்லை
இந்நிலையில், விஜய்யுடன், ராகுல் காந்தி பேசியது குறித்து தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''விஜய்யும், ராகுல் காந்தியும் நீண்டகால நண்பர்கள். கரூர் சம்பவம் குறித்து தான் ராகுல் காந்தி விஜய்யுடன் பேசியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் எந்தவித அரசியலும் இல்லை.
திமுக-காங்கிரஸ் கூட்டணி
ராகுல் காந்தி விஜய்யுடன் பேசியதால் நாங்கள் தவெகவுடன் கூட்டணி வைப்போம் என்பது அர்த்தமல்ல. தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருக்கிறது. முதல்வர் ஸ்டாலினை பொறுத்தவரை எந்த சமரமும் இல்லாமல் பாஜகவை கடுமையாக எதிர்த்து வருகிறார். எங்கள் கூட்டணி கொள்கை கூட்டணி'' என்று தெரிவித்துள்ளார்.