நீட் தேர்வில் 0 % எடுத்தாலே முதுநிலை மருத்துவம் படிக்கலாமா.! அப்போ ஏன் தேர்வை நடத்தனும்- உதயநிதி
தகுதி, தகுதி என்று சொல்லிவிட்டு, நீட் தேர்வை எழுதினாலே முதுநிலை மருத்துவம் படிக்கலாம் என்றால், அந்த தேர்வை ஏன் நடத்த வேண்டும் என்பது தான் மாணவர்கள் - பெற்றோர்களின் கேள்வியாக இருக்கிறது என உதயநிதி தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு மதிப்பெண் .?
நாடு முழுவதும் அரசு, தனியார்மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மருத்துவ பட்ட மேற்படிப்புகளான எம்டி, எம்எஸ், டிப்ளமோ மற்றும் பல் மருத்துவப் பட்ட மேற்படிப்பான எம்டிஎஸ் ஆகியவற்றுக்கான இடங்கள் நீட் தேர்வில் தகுதி பெற்றவர்களைக் கொண்டு நிரப்பப்பட்டு வருகிறது.
நீட் தேர்வில் தகுதி மதிப்பெண் ஜீரோவாக எடுத்திருந்தாலும் அல்லது அதற்கு குறைவாக (நெகட்டிவ்) எடுத்திருந்தாலும் எம்.டி, எம்.எஸ்., படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் என மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே 2 சுற்று முதுநிலை மருத்துவ கலந்தாய்வு முடிந்த நிலையில் 3வது சுற்றுக் கலந்தாய்வில் சலுகை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு நடத்துவது ஏன்.?
இது தொடர்பாக உதயநிதி வெளியிட்ட x தள பதிவில், நீட் தேர்வில் பூஜ்ஜியம் பெர்சன்டைல் எடுத்தாலே முதுநிலை மருத்துவம் படிக்கலாம் என ஒன்றிய அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது, நீட் தேர்வின் சூழ்ச்சியை அம்பலமாக்கியுள்ளது. தகுதி, தகுதி என்று சொல்லிவிட்டு, நீட் தேர்வை எழுதினாலே முதுநிலை மருத்துவம் படிக்கலாம் என்றால், அந்த தேர்வை ஏன் நடத்த வேண்டும் என்பது தான் மாணவர்கள் - பெற்றோர்களின் கேள்வியாக இருக்கிறது.
மத்திய அரசு பதில் சொல்லனும்
தனியார் பயிற்சி மையங்களையும் – தனியார் மருத்துவக்கல்லூரிகளையும் வளப்படுத்துவதற்கான ஏற்பாடு தான் நீட் தேர்வு என்று தி.மு.கழகம் ஆரம்பம் முதல் கூறி வந்தது இன்றைக்கு உண்மையாகியுள்ளது. மருத்துவராகும் கனவுடன் புறப்படும் நம் ஏழை – எளிய பிள்ளைகளை மரணக்குழியில் தள்ளும் நீட் அநீதிக்கு, ஒன்றிய அரசு பதில் சொல்லும் நாள் தொலைவில் இல்லை என உதயநிதி தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்