அமெரிக்காவின் 50% புதிய வரிவிதிப்பால் தமிழக ஏற்றுமதியாளர்கள் கடும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளனர். லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் உள்ளதால், மத்திய, மாநில அரசுகள் உடனடித் தீர்வு காண வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்கா இந்தியப் பொருட்களுக்கு விதித்துள்ள 50% புதிய வரியால் தமிழ்நாட்டின் ஏற்றுமதியாளர்கள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ளனர். இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாகவும், மத்திய, மாநில அரசுகள் உடனடியாக இதில் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் என்றும் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) தலைவர் விஜய் அறிக்கை வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.
பெரும் பொருளாதார பாதிப்பு:
இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு கிட்டத்தட்ட 10% ஆகும். ஜவுளி, ஆடை, தோல் பொருட்கள், வாகன உதிரிபாகங்கள், கடல் உணவு மற்றும் மின்னணுப் பொருட்கள் போன்ற பல துறைகள் தமிழகத்தில் இருந்து அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
அமெரிக்காவின் இந்த புதிய 50% வரிவிதிப்பால், இந்தியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் அமெரிக்க வணிகர்கள் இந்தியப் பொருட்களை வாங்குவதைத் தவிர்த்து வருகின்றனர். ஆனால் வங்கதேசம் போன்ற பிற ஆசிய நாடுகளுக்கு இந்த வரி விதிக்கப்படாததால், அவர்களின் பொருட்கள் அமெரிக்காவில் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன.
இந்த வரிவிதிப்பால், திருப்பூர் ஆடைத் தொழிற்சாலைகள், வேலூர் தோல் தொழிற்சாலைகள், கோவை நிறுவனங்கள் மற்றும் கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் உட்பட பல துறைகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தில் உள்ளனர். தூத்துக்குடியில் இருந்து அமெரிக்காவுக்குக் கப்பலில் சென்ற கடல் உணவுகள், வரி காரணமாகப் பாதி வழியிலேயே திருப்பி அனுப்பப்பட்டுள்ளன என்ற செய்திகள் கவலையளிக்கின்றன.
மத்திய மாநில அரசுகள் அலட்சியம்:
இந்த வரிவிதிப்பு அச்சுறுத்தல் நீண்ட காலமாக இருந்து வந்த நிலையில், வெளியுறவுக் கொள்கையில் சரியான நடவடிக்கை எடுக்காதது மத்திய அரசின் தவறு என்று விஜய் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோல், தமிழக அரசு, முதலீட்டு மாநாடுகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பற்றிப் பேசி வரும் வேளையில், ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழிலாளர்களைப் பாதுகாக்க எந்த அவசரத் திட்டமோ, நிவாரண நடவடிக்கைகளோ எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
தவெக-வின் 11 அம்சக் கோரிக்கைகள்:
தமிழகத்தின் தொழில்களையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகளுக்கு விஜய் 11 கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
1. தொழில் துறை தொழில்முனைவோர்கள் மற்றும் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்க, விரைவாகவும் தீர்க்கமாகவும் செயல்படக் கூடிய, தொழில் மற்றும் வர்த்தகப் பிரதிநிதிகளை (குறிப்பாகத் தமிழ்நாட்டிலிருந்து) உள்ளடக்கிய மத்திய-மாநில அளவிலான கூட்டுப் பணிக்குழுவை உருவாக்க வேண்டும்
2. வரிவிதிப்புக் காரணமாகச் செலவினங்கள் அதிகரிப்பு மற்றும் கொள்முதல் ஆணைகள் (Purchase Orders) ரத்து போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளும் சிறு, குறு மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்களை ஆதரிப்பதற்காக மத்திய அரசு ஒரு சிறப்பு ஏற்றுமதி நிலைப்படுத்தல் நிதியை உருவாக்க வேண்டும்.
3. பாதிப்பிற்கு உள்ளாகும் தொழிலாளர்களையும், நிறுவனங்களையும் பாதுகாக்க, தமிழக அரசு அவர்களின் ஊதியத்திற்கு உத்தரவாதம் தருவது. மானியக் கடன் வழங்குவது போன்ற நிவாரண நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
4.கடன் வழங்கும் செயல்முறையை எளிதாக்க, பாசல்-3 விதிமுறைகளிலிருந்து MSME நிறுவனங்களை நீக்கி, அதற்கான எளிய வங்கிக் கொள்கையை அறிமுகப்படுத்த வேண்டும்.
5. கூடுதல் வரியால் பாதிக்கப்பட்ட துறைகளில் MSME நிறுவனங்கள் பெற்ற கடனில் 5 சதவீத தள்ளுபடி வழங்கும் வகையில் மத்திய அரசு ஒரு பிரத்யேக வட்டி மானியத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.
6. பாதிக்கப்பட்ட அனைத்து ஏற்றுமதியாளர்களுக்கும் நிலுவையில் உள்ள கடனில் 30 சதவீதம் வரை பிணையமில்லாத கடன்களை அனுமதிக்கும் அவசரக் கடன் உத்தரவாதத் திட்டத்தை (ECLGS) மீண்டும் நடைமுறைப்படுத்தி அதனை விரிவுபடுத்த வேண்டும்.
7. வரிவிதிப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு அவர்கள் வாங்கியிருக்கும் வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்துவதிலிருந்து இரண்டு ஆண்டு காலத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்.
8. வரிவிதிப்பினால் ஏற்பட்டிருக்கும் சுமையை ஈடுசெய்ய, பருத்தி மற்றும் பிற மூலப் பொருள்களின் மீதான இறக்குமதி வரியைத் தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும்.
9. அமெரிக்காவைத் தவிர பிற நாடுகளுக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்களின் ஏற்றுமதியை அதிகரிக்க ஒரு சிறப்புச் செயல் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும்.
10. ஏற்றுமதியைப் பெருமளவு நம்பியிருக்கும் பல்வேறு துறைகளின் தொழிலாளர்களுக்குத் தற்காலிக நலத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.
11. அமெரிக்காவிற்கு அப்பால் ஏற்றுமதிகளைப் பன்முகப்படுத்த MSME நிறுவனங்களுக்கு உதவும் வகையில் சிறப்பு நிதித் தொகுப்பினை ஏற்படுத்த வேண்டும்.
கொரோனா தாக்கத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், இந்தச் சூழ்நிலை மேலும் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று எச்சரித்த விஜய், "தமிழக வெற்றிக் கழகம், நமது தொழில்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடும்" என்று உறுதியளித்துள்ளார். தமிழகத்தின் பொருளாதாரத்தைக் காக்க மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
