நீதிமன்ற உத்தரவுகளுக்கு இணங்க, ரசிகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்கக் கூடாது என தவெக அறிவுறுத்தியுள்ளது.
Vijay orders TVK volunteers : தமிழ் திரைத்துறையில் கலக்கி வருபவர் நடிகர் விஜய், ஒவ்வொரு படத்தின் மூலம் 100 கோடிக்கு மேல் சம்பளமாக பெற்று வந்த விஜய், அனைத்தையும் தூக்கி போட்டு விட்டு அரசியல் களத்தில் இறங்கியுள்ளார். 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் முக்கிய இலக்காக கொண்டுள்ளார். எனவே தற்போது நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் தான் தனது கடைசி திரைப்படம் என அறிவித்துள்ளார். இதனையடுத்து தேர்தலுக்கு தயாராகும் வகையில் திட்டமிட்டு வருகிறார். விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ரசிகர்களை சந்திக்கவுள்ளார். இதற்கான திட்டமானது வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பேனர், விளம்பர பலகை வைக்கக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
விளம்பர பேனர்கள் வைக்க தடை
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் பேனர் வைப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. சென்னை உயர் நீதிமன்றம் பொது இடங்களில் அனுமதியின்றி பேனர் வைப்பதை தடை செய்தது. இதனையும் மீறி ஒரு சில இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பேனர்கள் கிழே விபத்துக்ளும் ஏற்படுகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக தமிழக வெற்றிக்கழக தலைமை நிலையச் செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்களின் உத்தரவு மற்றும் அன்புக் கட்டளையின்படி கழகத்தின் சார்பில் நடத்தப்படும் அனைத்து நிகழ்ச்சிகளும், விழாக்களும், உரிய அனுமதியுடன், மிகுந்த கண்ணியத்துடன் கட்டுப்பாடுடன் இருப்பதை கழக நிர்வாகிகள் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும். இதுவரை, எந்தச் சூழலிலும் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்களோ, விளம்பரப் பதாகைகளோ கழகம் சார்பில் வைக்கப்படவில்லை.
ரசிகர்களுக்கு அதிரடி உத்தரவிட்ட விஜய்
நம் வெற்றித் தலைவர் அவர்களும் பேனர்கள் மற்றும் விளம்பரப் பதாகைகள் வைப்பதை விரும்புவதோ ஊக்கப்படுத்துவதோ இல்லை. எனவே, கழகத் தலைவர் அவர்களின் உத்தரவை மாநிலம், மாவட்டம், நகரம், ஒன்றியம், பேரூர், கிளைக்கழகம் மற்றும் சார்பு அணிகள் உள்ளிட்ட கழகத்தின் அனைத்து நிலையிலான அமைப்புகளும் மிகவும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். குறிப்பாக, நகரில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும், நெடுஞ்சாலையோரங்களிலும் கழகத்தின் சார்பில் பேனர்கள் எந்த காரணத்திற்காகவும் அறவே வைக்கக் கூடாது. இது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளையும், காவல்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிந்து, கழக வழக்கறிஞர்கள் அணியின் உதவியுடன் செயல்பட வேண்டும் என்று கழக நிர்வாகிகள், தோழர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
