மத்திய பாஜக அரசு சமஸ்கிருத மேம்பாட்டிற்கு ரூ.2,533.59 கோடி ஒதுக்கியுள்ளது. தமிழ் உள்ளிட்ட 5 செம்மொழிகளுக்கு ரூ.147.56 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளாக எந்த மொழியை மேம்படுத்த மத்திய பாஜக அரசு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 2014-15 முதல் 2024-25 வரையிலான பத்து ஆண்டுகளில் சமஸ்கிருதத்தை மேம்படுத்த ரூ.2,533.59 கோடி செலவு செய்யப்பட்டிருப்பது ஆர்டிஐ மூலமாக அம்பலமாகியுள்ளது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் சமஸ்கிருத வளர்ச்சி ரூ.230.24 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.

சமஸ்கிருதத்திற்கு ரூ.2,533.59 கோடி ஒதுக்கீடு செய்த மத்திய அரசு மற்ற மொழிகளுக்கு மிக குறைவான தொகையே ஒதுக்கீடு செய்துள்ளது. அதேபோல் மற்ற 5 இந்திய செம்மொழிகளான தமிழ், கன்னடம், தெலுங்கு, ஒடியா மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளுக்கு 10 ஆண்டுகளில் ரூ.147.56 கோடி மட்டுமே நிதி ஒதுக்கி உள்ளது. சமஸ்கிருதத்தை விடவும் 22 மடங்கு தமிழுக்கு குறைவாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 5 மொழிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை விட சமஸ்கிருதத்திற்கு 17 மடங்கு கூடுதலாக செலவிடப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு குறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தளத்தில்: பாஜக அரசு சமஸ்கிருதத்துக்கு ரூ.2532.59 கோடியும் தமிழ் உள்ளிட்ட பிற ஐந்து செம்மொழிகளுக்கும் சேர்த்து 147.56 கோடியும் ஒதுக்கியுள்ளது. தமிழ், தமிழ்நாட்டு மக்கள், தமிழ் கடவுள்கள் எல்லாம் பாஜகவுக்கு ஓட்டுக்கு மட்டும் தான். நோட்டுகள் எல்லாம் சமஸ்கிருதத்துக்கு தான். இது தான் பாஜகவின் அப்பட்டமான சமஸ்கிருத மேலாதிக்க வெறி என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்: ஒன்றிய அரசு சமஸ்கிருதத்தை மேம்படுத்துவதற்காக ரூ.2532.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பது, தமிழ் உள்ளிட்ட 5 மாநில மொழிகளுக்கு ரூ.147.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதை விட 17 மடங்கு அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் சமஸ்கிருதம் கோடிக்கணக்கில் பணம் பெறுகிறது. தமிழ் மற்றும் பிற தென்னிந்திய மொழிகளுக்கு முதலைக் கண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. போலிப் பாசம் தமிழுக்கு; பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு என தெரிவித்துள்ளார்.