கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய் மாமல்லபுரத்தில் உள்ள விடுதி ஒன்றில் தனித்தனியாக சந்தித்து ஆறுதல் கூற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கரூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய்யின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தமாக 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இச்சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக தவெக, தமிழக அரசு என இரு தரப்பும் பரஸ்பரம் குற்றம் சாட்டிவந்த நிலையில், அசம்பாவிதம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.

கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை திமுக, அதிமுக, பாஜக உட்பட பல்வேறு அரசியல் கட்சியினரும் நேரில் சந்தித்து தங்கள் ஆறுதலைத் தெரிவித்தனர். ஆனால் கரூர் சம்பவத்திற்கு மையப்புள்ளியாக அறியப்படும் தவெக தலைவர் விஜய் மட்டும் தற்போது வரை பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறாதது அப்பகுதி மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்துகிறது.

மேலும் தவெக சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.20 லட்சம் இழப்பீடு தொகையும் தீபாவளிக்கு சில தினங்களுக்கு முன்பாக தான் பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டது.

இதனிடையே விஜய் விரைவில் கரூர் செல்ல உள்ளதாகவும், கரூரில் திருமண மண்டபம் ஒன்றில் இதற்கான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் அரசியல் கட்சிகளின் அழுத்தம் காரணமாக மண்டப உரிமையாளர்கள் இந்த நிகழ்ச்சிக்கு இடம் வழங்க முன்வரவில்லை என்ற தகவலும் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரையும் மாமல்லபுரம் அழைத்து வரும் தவெக நிர்வாகிகள் அவர்களை தனியார் விடுதியில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 50 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் பாதிக்கப்பட்டவர்களை ஒவ்வொரு அறைக்கும் நேரில் சென்று பார்த்து தனது ஆறுதலை தெரிவிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.