SIR தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களில் தவெக தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும், அந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும் என வலியுறுத்தி தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கடிதம் எழுதி உள்ளார்.
Vijay Letter to Election Commission : இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில், சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகளுடன் நடத்தப்படும் ஆலோசனைக் கூட்டங்களில் தவெக புறக்கணிக்கப்படுவதாக விஜய் குற்றச்சாட்டை முன் வைத்து இருக்கிறார்.
சமத்துவத்தையும், ஜனநாயக சமநிலையையும் பாதிக்கும் வகையில் இந்த செயல்பாடு உள்ளதாகவும், தேர்தல் செயல்முறைகள் முழுமையாக, வெளிப்படையாக இருக்க வேண்டும் என்றால், தவெக-வையும் அடுத்தடுத்த ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்பு கூட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் அழைக்க வேண்டும் என்கிற கோரிக்கையையும் விஜய் முன்வைத்துள்ளார்.
தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் வாக்களர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. அதுதொடர்பான ஆலோசனை கூட்டங்களில், தமிழக வெற்றிக் கழகம் அழைக்கப்படுவதில்லை என்பதால் அதற்கு தங்கள் கட்சியையும் அழைக்க வலியுறுத்தி அவர் இந்த கடிதத்தை தேர்தல் ஆணையத்திற்கு எழுதி உள்ளார்.

தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதிய விஜய்
தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தை பயன்படுத்தி, பதிவு செய்யப்பட்ட கட்சி என்கிற அடிப்படையில், தவெக-வை அதிகாரப்பூர்வ ஆலோசனை கூட்டங்களில் சேர்க்க உத்தரவிட வேண்டும் என்கிற கோரிக்கையையும் இந்த கடிதம் வாயிலாக விஜய் முன்வைத்துள்ளார். தேர்தல் ஆணையத்திற்கு முழு ஒத்துழைப்பை வழங்க தவெக தயாராக இருப்பதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடைபெற இது அவசியமானது என்கிற கருத்தையும் முன்வைத்து அந்த கடிதத்தை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி இருக்கிறார் விஜய். கடந்த நவம்பர் 12ந் தேதி முதல் தேர்தல் நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் தொடங்கி இருக்கும் நிலையில், விஜய் எழுதி இருக்கும் இந்த கடிதம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. விஜய்யின் வேண்டுகோளை ஏற்று இனி நடக்கும் SIR கூட்டங்களுக்கு தவெகவுக்கு அழைப்பு விடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
