தவெக தொண்டர்களை நாம் தமிழர் கட்சி, திமுக நிர்வாகிகள் பலரும் அணில் என குறிப்பிடும் நிலையில் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் விஜய்யுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து இவரும் அணில் தானா என கேள்வி எழுப்பி உள்ளனர்.

அதிமுக, திமுக, பாஜக என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களாலும் பாரபட்சம் இன்றி ரசிக்கப்பட்ட நடிகர் விஜய் புதிதாக அரசியல் கட்சி தொடங்கியதில் இருந்து அளவுகடந்த விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். குறிப்பாக தம்பி, தம்பி என வார்த்தைக்கு வார்த்தை சீமானால் அன்போடு அழைக்கப்பட்ட விஜய் தற்போது சீமானாலே அதிகமாக விமர்சிக்கப்படுகிறார்.

கட்சி தொடங்கியபோது கூட விஜய்யை ஆதரித்த சீமான், பின்னாளில் திராவிடத்திற்கு ஆதரவான விஜய்யின் கருத்துகளால் அதிருப்தி அடைந்து வெளிப்படையாக மேடைகளிலேயே எதிர்க்கத் தொடங்கினார். பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய சீமான், TVK.. TVK என சொல்லும் போது டீ விற்க.. டீ விற்க என கேட்கிறது. தளபதி.. தளபதி.. என்று சொல்லும் போது தலைவிதி.. தலைவிதி.. என கேட்கிறது என்று வெளிப்படையாக தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.

அதே போன்று தவெக தொண்டர்களை அணில் குஞ்சுகள் என்று சீமான் மேடையில் பேசியது விஜய்க்கு எதிரான மனநிலை கொண்டவர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது. அதன் பின்னர் திமுக உட்பட பல கட்சி நிர்வாகிகளும் தவெக தொண்டர்களை அணில் என்று குறிப்பிடுகின்றனர்.

இந்நிலையில் தவெக ஆதரவாளர்கள், துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின், விஜய்யுடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து இவரும் அணில் தானா என்று கேள்வி எழுப்பும் தொணியில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.