கீழடி அகழாய்வின் முக்கியத்துவம் வாய்ந்த முதல் இரு கட்ட அறிக்கையை வெளியிட மறுக்கும் மத்திய அரசுக்கு தமிழக வெற்றிக் கழகம் கடும் கண்டனம். அறிக்கையை வெளியிடாமல் காலம் தாழ்த்துவதையும், அமர்நாத்தை பணியிட மாற்றம் செய்ததையும் கட்சி விமர்சித்துள்ளது.

கீழடி அகழாய்வின் முக்கியத்துவம் வாய்ந்த முதல் இரு கட்ட அறிக்கையை வெளியிட மறுக்கும் மத்திய அரசுக்கு தமிழக வெற்றிக் கழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய பாஜக அரசுடன் மறைமுகமாக ஒத்துழைப்பதாக திமுகவையும் சாடியுள்ளார்.

அருண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

கீழடி அகழாய்வுப் பின்னணி:

2014-இல் சிவகங்கை மாவட்டம் கீழடியில் இந்தியத் தொல்லியல் துறை அகழாய்வை மேற்கொண்டது. அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையிலான குழு, கிடைத்த பொருட்களைக் கொண்டு அங்கு நகர நாகரிகம் இருந்ததற்கான முடிவுக்கு வந்தது. அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், அமர்நாத் அசாம் மாநிலத்திற்கு திடீரென மாற்றப்பட்டார்.

ஆய்வு நிறைவு மற்றும் தமிழக அரசின் தலையீடு:

மூன்றாம் கட்ட அகழாய்வு திரு. ஸ்ரீராமன் என்பவரால் மேற்கொள்ளப்பட்டு, மேற்கொண்டு அகழாய்வு செய்ய ஒன்றுமில்லை எனக் கூறி நிறைவு செய்யப்பட்டது. அதன் பின்னர், தமிழக அரசின் சார்பில் நான்காம் கட்ட அகழாய்வு தொடங்கப்பட்டது. தற்போது 10-ஆம் கட்ட அகழாய்வு தமிழகத் தொல்லியல் துறை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அமர்நாத்தின் அறிக்கை மற்றும் மத்திய அரசின் தாமதம்:

கீழடி முதல் இரண்டு கட்ட அகழாய்வு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், இதன் அறிக்கை குறித்து அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. அசாம், கோவா, பின்னர் மீண்டும் சென்னை எனப் பணியிட மாற்றம் செய்யப்பட்ட அமர்நாத், கடந்த 2023 ஜனவரி மாதம் கீழடி முதல் இரண்டு கட்ட அகழாய்வு அறிக்கையை இந்தியத் தொல்லியல் துறையிடம் (ஏஎஸ்ஐ) சமர்ப்பித்தார். இந்த 982 பக்க அறிக்கையில், கீழடி நாகரிகம் சுமார் 2600 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை அவர் தெளிவாக விளக்கியுள்ளார்.

அமர்நாத் பணியிட மாற்றம், பாஜகவின் நோக்கம்:

அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் வெளியிடாமல் மத்திய அரசு காலம் தாழ்த்தியது. ஏஎஸ்ஐ இயக்குநர் திரு. நாயக், அறிக்கையை மறுபரிசீலனை செய்யுமாறு அமர்நாத்திடம் கேட்டுக்கொண்டார். இந்நிலையில், கீழடி அகழாய்வு மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணாவை நொய்டாவுக்குப் பணியிட மாற்றம் செய்து மத்தியத் தொல்லியல் துறை ஜூன் 17 அன்று உத்தரவிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் கண்டனம்:

"மக்கள் காதுகளில் பூச்சுற்றுவதற்காகப் பா.ஜ.க சொல்லும் புராணக் கதைகள் அல்ல, கீழடி ஆய்வு முடிவுகள். அது அறிவியல்பூர்வமான ஆதாரங்களைக் கொண்டு தொகுக்கப்பட்ட ஆய்வு அறிக்கை. இத்தகைய கீழடி அகழாய்வு குறித்த அறிக்கை வெளிவந்தால், பா.ஜ.க. காலகாலமாகச் சொல்லும் கட்டுக் கதைகள் உடைபடும். சிந்துச் சமவெளி நாகரிகத்திற்கு முந்தையது வைகை நாகரிகம் என்பதும் வெளிவரும். இதனால் திட்டமிட்டு, இந்த ஆய்வு அறிக்கையை இருட்டடிப்பு செய்ய, ஒன்றிய பா.ஜ.க. அரசு முயலுகிறது," என்று அருண்ராஜ் கூறியுள்ளார்.

திமுக மீது குற்றச்சாட்டு:

"ஒன்றிய அரசில் இருக்கும் இவர்கள்தான் இப்படி என்றால், இங்கு இருக்கும் தற்போதைய ஆட்சியாளர்களான கபட நாடகத் தி.மு.க. போடும் நாடகம் இன்னும் மோசமாக இருக்கிறது. தங்கள் ஆட்சிக்கு எதிராகவோ, ஆட்சியாளரின் குடும்பத்திற்கு எதிராகவோ ஊழல் புகார்களும் கெட்ட பெயர்களும் எழுகிற போதெல்லாம், தமிழ், தமிழர் என்ற முகமூடியை அணிந்து கம்பு சுற்றும் தி.மு.க.வின் கபட நாடக அரசியலைத் தமிழக மக்களும் கவனித்துக்கொண்டுதான் உள்ளனர். கீழடியின் பெருமையை மறைக்க உள்ளடி வேலை செய்யும் ஒன்றிய பா.ஜ.க.வுடன், வெளியே மட்டும் எதிர்ப்பு வேடம் போட்டுக்கொண்டு, குடும்ப நிதியைக் காப்பதற்காக ஒரே போர்வைக்குள் ஒளிந்துகொண்டு, மறைமுகமாக ஒத்து ஊதும் தி.மு.க.விற்கும் சேர்த்துச் சொல்லிக்கொள்கிறோம்: தமிழ், தமிழர் நாகரிக வானத்தை எந்தப் புழுதிப் போர்வையும் போர்த்தி அழுக்காக்கிவிட இயலாது" என்று அருண்ராஜ் சாடியுள்ளார்.

தமிழ், தமிழர் நாகரிகத்தை மறைக்க முயற்சி செய்வோருடன் மறைமுகமாகவோ, நேரடியாகவோ துணைபோகும் சக்திகள் மக்கள் மத்தியில் அம்பலமாவது நிச்சயம் என்றும் தமிழக வெற்றிக் கழகம் எச்சரித்துள்ளது.