கீழடி அகழாய்வில் முக்கியப் பங்காற்றிய தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா நொய்டாவுக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கை தமிழக அரசியல் வட்டாரத்திலும், தமிழ் ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கீழடியில் அகழாய்வுகளுக்குத் தலைமை தாங்கிய தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா, நொய்டாவுக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்திய தொல்லியல் துறையின் இந்த நடவடிக்கை, தமிழக அரசியல் வட்டாரத்திலும், தமிழ் ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கீழடி அகழாய்வு மற்றும் சர்ச்சைகள்
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் சிவகங்கை மாவட்டம் கீழடியில் இந்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த அகழாய்வுகளில், சங்க காலம் மற்றும் அதற்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த பழைமையான தமிழ் நாகரிகத்தின் ஆதாரங்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த கண்டுபிடிப்புகள் தமிழ் பண்பாட்டின் தொன்மையை உலகிற்கு உணர்த்தும் வகையில் அமைந்தன.
இந்த அகழாய்வின் முக்கியப் பொறுப்பில் இருந்த தொல்லியல் துறை நிபுணர் அமர்நாத் ராமகிருஷ்ணன், தனது விரிவான 982 பக்க ஆய்வறிக்கையை 2023 ஆம் ஆண்டில் இந்திய தொல்லியல் துறை இயக்குனரிடம் சமர்ப்பித்தார். ஆனால், மத்திய அரசு "போதுமான ஆதாரங்கள் இல்லை" என்று கூறி, அந்த அறிக்கையில் திருத்தங்கள் செய்யக் கோரி மாநில அரசுக்கு திருப்பி அனுப்பியது.
முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சனம்
மத்திய அரசின் இந்தச் செயல், தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் கண்டனத்தைப் பெற்றது. திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இன்றுகூட (ஜூன் 17), தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், "எத்தனை எத்தனை தடைகள் நம் தமிழினத்துக்கு? அத்தனையையும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எதிர்த்துப் போராடி, அறிவியல் துணைக்கொண்டு நம் இனத்தின் தொன்மையை நிறுவி வருகிறோம்! இருந்தும் ஏற்க மறுக்கின்றன சில மனங்கள். திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை! நாளை மதுரை வீரகனூரில் திமுக மாணவரணி நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் கூடி ஒன்றிய அரசுக்கு நமது தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்துவோம்! அவர்களைத் திருத்துவோம்!" என்று அழைப்பு விடுத்திருந்தார்.
பணிமாற்ற உத்தரவுக்கு எதிர்ப்பு
இந்தச் சூழ்நிலையில்தான், கீழடி அகழாய்வில் முக்கியப் பங்காற்றிய அமர்நாத் ராமகிருஷ்ணாவை நொய்டாவுக்குப் பணியிட மாற்றம் செய்து மத்திய தொல்லியல் துறை இன்று (ஜூன் 17) உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவில், "பண்டைய கால மற்றும் தேசிய நினைவுச் சின்னங்கள், தொல்பொருள்கள் அமைப்பின் இயக்குநராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணா, நொய்டாவின் தேசிய நினைவுச் சின்னங்கள், தொல்பொருள்கள் அமைப்பின் இயக்குநராகப் பணியாற்றுவார். பண்டைய கால ஆய்வுத் துறை, ஹெச்.ஏ. நாயக்கிடம் வழங்கப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சு. வெங்கடேசன் கண்டனம்
அமர்நாத் ராமகிருஷ்ணா பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், "கண்டறியப்பட்ட உண்மைக்காக இடைவிடாமல் வேட்டையாடப்படுகிறார் அமர்நாத் ராமகிருஷ்ணன். ஒன்றிய அரசின் வஞ்சக செயல்களுக்கு தமிழக மக்கள் உரிய முறையில் பதில் அளிப்பார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த திடீர் பணியிட மாற்றம், கீழடி அகழாய்வு முடிவுகளை மத்திய அரசு ஏற்றுக்கொள்வதில் உள்ள தயக்கத்தின் வெளிப்பாடு என்றும், தமிழகத்தின் பண்பாட்டு அடையாளங்களை அங்கீகரிப்பதில் மத்திய அரசுக்கு உள்ள அணுகுமுறையையும் இது கேள்விக்குள்ளாக்குகிறது என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். இந்த விவகாரம் தமிழகத்தில் மேலும் சர்ச்சையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
