ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தமிழக முதலீடு குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டால் தொழில் துறை அமைச்சர் பொறுப்பற்ற முறையில் சிறுபிள்ளைத்தனம் போல் பதில் சொல்வதாக பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழகத்தில் ரூ.15,000 கோடிக்கு முதலீடு செய்ய உள்ளது. இதன்மூலம் 14,000 பேருக்கு வேலை கிடைக்கும் என்று முதல்வர் ஸ்டாலினும், தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவும் தெரிவித்து இருந்தனர். ஆனால் தமிழகத்தில் முதலீடு செய்வது குறித்து ஏதும் தமிழக அரசிடம் பேசவில்லை என்று ஃபாக்ஸ்கான் நிறுவனம் விளக்கம் அளித்ததாக தகவல் வெளியாகி இருந்தது.

அன்புமணி முன்வைத்த குற்றச்சாட்டு

இதை முன்வைத்து தமிழக அரசை குற்றம்சாட்டிய பாமக தலைவர் அன்புமணி, 'தமிழக முதலமைச்சர் அவர்களை ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் பிரதிநிதி ராபர்ட் வூ சந்தித்து பேசியது உண்மை. ஆனால் இந்த சந்திப்பின் போது எந்த புதிய ஒப்பந்தம் குறித்தும் பேசப்படவில்லை; உறுதியளிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்று சொல்வார்கள். ஆனால், திமுக அரசின் புளுகு அரை நாளில் அமபலமாகியிருக்கிறது' என்று தெரிவித்து இருந்தார்.

அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விளக்கம்

இதற்கு பதில் அளித்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, '' பாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் 15,000 கோடி முதலீடு செய்து 14,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்தது என்பது உறுதியான, சரியான, எந்தவித தவறும் இல்லாத 100/100 உண்மையான செய்தி'' என்று கூறியிருந்தார்.

மேலும் இது தொடர்பாக சட்டப்பேரவையில் விளக்கம் அளித்த டி.ஆர்.பி.ராஜா, ''ஃபாக்ஸ்கான் முதலீடு கண்டிப்பாக தமிழகத்துக்கு வரும். ஃபாக்ஸ்கான் என்பது ஒரு நிறுவனம் கிடையாது. அது பல நிறுவனம். நமக்கு முதலீடு செய்த ஃபாக்ஸ்கான் வேறு. நமது முதல்வர் முதலீட்டில் கையெழுத்தட்டுள்ளார். நிச்சயம் 14,000 பொறியாளர்களுக்கு வேலை கிடைக்கும்'' என்றார்.

ஆந்திராவில் முதலீடு செய்யும் கூகுள்

இதற்கிடையே கூகுள் நிறுவனம் ஆந்திராவில் 1.3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏஐ டேட்டா சென்டரை அமைக்க அந்த மாநில அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. தமிழரான சுந்தர் பிச்சை தலைமை வகிக்கும் கூகுள் தமிழகத்தில் முதலீடு செய்யாமல் ஏன் ஆந்திரா சென்றது? எனவும் பலர் கேள்வி எழுப்பினார்கள். இது தொடர்பான கேள்வியை அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி சட்டப்பேரவையில் கேட்டார்.

பின்னணியில் அதானி குழுமம்

இதற்கும் விளக்கம் கொடுத்த டி.ஆர்.பி.ராஜா, ''கூகுள் நிறுவனம் ஆந்திராவில் முதலீடு செய்ததற்கு பின்னணியில் அதானி குழுமம் உள்ளது. அண்டை மாநிலம் கூகுளுடன் முதலீடு செய்த நிலையில், இதுபற்றி குறைகூற விரும்பவில்லை. கூகுளுடன் தமிழகம் முதலீடு செய்ய விரும்பவில்லை என்பது உண்மைக்கு புறம்பான தகவல்'' என்று தெரிவித்தார்.

கேள்விகளை கேட்பது எதிர்க்கட்சிகளின் வேலை

ஃபாக்ஸ்கான் குறித்தும், கூகுள் குறித்தும் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் கொடுத்த விளக்கம் பொறுப்பற்ற முறையில் உள்ளதாக பல்வேறு தரப்பினரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். நிறுவனங்களுடன் அரசு முதலீடு செய்தது ஏன் வரவில்லை? என்ற கேள்விகளை கேட்பது எதிர்க்கட்சிகளின் வேலை.

அமைச்சரின் சிறுபிள்ளைத்தனமான விளக்கம்

அதற்கு நிதி அமைச்சரோ அல்லது தொழில்துறை அமைச்சரோ இந்த தேதியில் முதலீட்டு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதுவரை இவ்வளவு முதலீடு, இவ்வளவு வேலைவாய்ப்புகள் வந்துள்ளது. இனி இவ்வளவு முதலீடு வர வேண்டும் என ஆதாரத்துடன் விளக்கம் கொடுத்தால் அது சரியாக இருக்கும். அதை விட்டு விட்டு நாம் முதலீடு செய்த நிறுவனம் வேறு. அதை மறுத்துள்ள நிறுவனம் வேறு என்று பள்ளி மாணவனை போல் சிறுபிள்ளைத்தனமாக பேசுவது உயர் பொறுப்பில் இருக்கும் ஒரு அமைச்சருக்கு அழகல்ல என பலரும் குற்றம்சாட்டுகின்றனர்.

பொறுப்பான பதவிக்கு இது அழகா?

இதேபோல் ஃபாக்ஸ்கான் முதலீடு ஏன் வரவில்லை என கேட்டால் அது குறித்த சந்தேகத்தை தீர்த்து வைக்காமல், கூகுள் முதலீடு ஆந்திரா சென்ற பின்னணியில் அதானி குழுமம் உள்ளது என அண்டை மாநில முதலீடுகள் மீது அரசியல் பழிகளை போட்டு விட்டு அமைச்சர் தப்பிச் செல்வது எல்லாம் எந்த வகையில் நியாயம்? என்றும் எதிர்க்கட்சியினர் உள்பட பலரும் கேள்விகளை முன்வைக்கின்றனர்.