தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப்-4 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு தேதிகளை அறிவித்துள்ளது. இந்த கலந்தாய்வு டிசம்பர் 8 முதல் 18 வரை சென்னையில் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - தொகுதி IV (குரூப்-4) தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு (Counselling) தேதிகளைத் தேர்வாணையம் இன்று அறிவித்துள்ளது.

குரூப்-4 கலந்தாய்வு

குரூப்-4 தேர்வுக்கான மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை விவரங்கள் கடந்த 22.10.2025 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது கலந்தாய்விற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணிகள்: இளநிலை உதவியாளர் (Junior Assistant), கிராம நிர்வாக அலுவலர் (VAO) உள்ளிட்ட பல்வேறு பதவிகள்.

நாள்: 08.12.2025 முதல் 18.12.2025 வரை (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக).

இடம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், எண்.3, தேர்வாணையச் சாலை (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்), சென்னை 600 003.

சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்பாணை

மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்காக அழைக்கப்பட்டுள்ள தேர்வர்களின் பட்டியல், தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வர்கள் தங்களது கலந்தாய்வுக்கான நாள், நேரம் மற்றும் இதர விவரங்கள் அடங்கிய அழைப்பாணையை (Call Letter) தேர்வாணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

அழைப்பாணை தனியாக அஞ்சல் மூலம் அனுப்பப்பட மாட்டாது. தேர்வர்களுக்குக் கலந்தாய்வு விவரம் குறுஞ்செய்தி (SMS) மற்றும் மின்னஞ்சல் (E-mail) மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும்.

முக்கிய அறிவிப்பு

சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் அனைவரும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டு, தெரிவு செய்யப்படுவார்கள் என்பதற்கு உறுதி அளிக்க இயலாது. இது தற்காலிகமான அழைப்பு மட்டுமே.

தேர்வர்கள் குறிப்பிடப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் கலந்துகொள்ளத் தவறினால், மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது என்றும் தேர்வாணையம் தெளிவாகத் தெரிவித்துள்ளது.

தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேதியில், உரிய மூலச் சான்றிதழ்களுடன் குறித்த நேரத்தில் தேர்வாணைய அலுவலகத்தில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.