TNPSC குரூப் 4 தேர்வு முடிவு வெளியீடு..! ரிசல்ட் எப்படி பார்ப்பது? முழு விவரம் இதோ!
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இந்த தேர்வு முடிவை எப்படி பார்ப்பது? சன்றிதழ் சரிபார்ப்பு எப்போது? என்பது உள்ளிட்ட விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாட்டில் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வு நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்து வருகிறது. அந்தந்த பதவிகளை பொறுத்து குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல நிலைகளில் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் அரசு வேலையில் சேர்ந்து வருகின்றனர்.
குரூப் 4 தேர்வு முடிவு வெளியீடு
இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 12ம் தேதி நடைபெற்ற குரூப் 4 (Group 4) தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. மொத்தம் 4,662 பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வு நடந்தது. தமிழ்நாடு முழுவதும் 38 தேர்வு மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வை மொத்தம் 13,89,738 பேர் எழுதியிருந்தனர். இந்த தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி (TNPSC) அறிவித்து இருந்த நிலையில், இன்று முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
ரிசல்ட் எப்படி பார்ப்பது?
குரூப் 4 தேர்வு எழுதியவர்கள் தங்களின் பதிவு எண் (Register Number), பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிட்டு, தேர்வாணையத்தின் இணையதளங்களான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகியவற்றில் தங்களின் மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை நிலையை அறிந்து கொள்ளலாம்.
வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், மதிப்பெண்கள், ஒட்டுமொத்த தரவரிசை, வகுப்புவாரியான தரவரிசை மற்றும் சிறப்புப் பிரிவினருக்கான தரவரிசை போன்ற விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
சான்றிதழ் சரிபார்ப்பு எப்போது?
தேர்வு எழுதியவர்கள் அவர்களின் தரவரிசை நிலை, இணையவழி விண்ணப்பத்தில் கோரியுள்ள உரிமைகோரல்கள் மற்றும் இடஒதுக்கீட்டு விதியின் அடிப்படையில் தேர்வாணையம் பரிந்துரைத்த விகிதாச்சாரம் ஆகியவற்றின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு (Onscreen Certificate Verification) அனுமதிக்கப்படுவார்கள்.
டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு
காணொளிச் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவு எண்கள் அடங்கிய பட்டியல் விரைவில் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும். இது குறித்த தகவல் விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி (SMS) மற்றும் மின்னஞ்சல் (e-mail) மூலமாக மட்டுமே அனுப்பப்படும்.
தனிப்பட்ட தகவல் அஞ்சல் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்படாது என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு www.tnpsc.gov.inஎன்ற தேர்வாணயத்தின் இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.