நீட் தேர்வு எழுத வந்த மாணவி ஒருவருக்கு அதிக பட்டன்கள் இருந்ததால் அனுமதி மறுக்கப்பட்டது. அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் காவலர், மாணவியை அழைத்துச் சென்று புதிய ஆடை வாங்கித் தந்து உதவினார்.
நீட் தேர்வுக்கு வந்த மாணவிக்கு அதிக பட்டன்கள் இருந்ததால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் காவலர் உடனடியாக இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று புதிய ஆடை வாங்கித் தந்து உதவினார். சரியான நேரத்தில் மாணவிக்கு உதவிய பெண் போலீசாரின் செயல் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.
நாடு முழுவதும் 2025-26ஆம் கல்வியாண்டு சேர்க்கைக்கான 'நீட்' நுழைவுத் தேர்வு இன்று நடைபெற்றது. பிற்பகல் 2 மணி முதல் 5.20 மணி வரை நேரடி முறையில் பேப்பர் மற்றும் பேனா மூலம் நடைபெற்ற இந்தத் தேர்வில் நாடு முழுவதிலுமிருந்து சுமார் 22 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 31 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டு தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். குறிப்பாக சென்னையில் மட்டும் 44 தேர்வு மையங்களில் 21,960 மாணவ மாணவிகள் தேர்வெழுதினர்.
திருப்பூரில் நீட் தேர்வு:
இந்நிலையில், திருப்பூரில் அமைக்கப்பட்டிருந்த நீட் தேர்வு மையம் ஒன்றில் அசாதாரணமான சம்பவம் நிகழ்ந்தது. தேர்வு எழுத வந்த மாணவி ஒருவரின் உடையில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக எண்ணிக்கையில் பட்டன்கள் இருந்ததாகக் கூறி, தேர்வு மைய அதிகாரிகள் அந்த மாணவியை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனால் செய்வதறியாது கலக்கமடைந்த அந்த மாணவி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். தேர்வு எழுத வந்த இடத்தில் ஏற்பட்ட இந்தத் தடையால் அவர் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றார்.
அப்போது, அந்தத் தேர்வு மையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவர் மாணவியின் நிலையைக் கவனித்தார். உடனடியாக மனிதாபிமானத்துடன் செயல்பட்ட அந்தப் பெண் காவலர், மாணவியை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று அருகில் இருந்த ஒரு துணிக்கடைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அந்த மாணவிக்குத் தேவையான புதிய உடையை தனது சொந்தப் பணத்தில் வாங்கித் தந்தார்.
புதிய ஆடையை அணிந்து கொண்டு அந்த மாணவி மீண்டும் தேர்வு மையத்திற்குத் திரும்பினார். பின்னர் வழக்கமான சோதனைக்குப் பிறகு, தேர்வு மைய அதிகாரிகள் அந்த மாணவியை உள்ளே அனுமதித்தனர். சரியான நேரத்தில் அந்த மாணவிக்கு உதவி செய்த அந்தப் பெண் போலீசாரின் கருணை உள்ளமும் துரித நடவடிக்கையும் அங்கிருந்த பலராலும் பாராட்டப்பட்டது. ஒரு மாணவியின் எதிர்காலத்தை காப்பாற்றிய அந்தப் பெண் காவலரின் செயல் அனைவரின் மனதிலும் நீங்கா இடம்பிடித்துள்ளது.
இந்தச் சம்பவம், கடமையுணர்வும் மனிதாபிமானமும் ஒருங்கே பெற்ற காவல்துறையினரின் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. மாணவிக்குத் தக்க சமயத்தில் உதவி செய்த அந்தப் பெண் போலீசாரின் செயல் பலராலும் போற்றப்பட்டு வருகிறது. அவரது மனிதாபிமானமிக்க செயல் மற்றவர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக அமைந்துள்ளது.


