திருப்பூரில் உள்ள தனியார் பள்ளி கணித ஆசிரியர் ஒருவர், 11ம் வகுப்பு மாணவனுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தனது அந்தரங்க உறுப்பை புகைப்படம் எடுத்து அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவனின் தந்தை அளித்த புகாரின் பேரில் ஆசிரியர் போக்சோவில் கைது செய்தனர்.

திருப்பூர் மங்கலம் சாலை பகுதியில் தனியார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் 11ம் வகுப்பில் படித்து வந்த மாணவன் கடந்த சில நாட்களாகவே எந்நேரமும் போனும் கையுமாக இருந்துள்ளார். பெற்றோர் எச்சரித்தும் கேட்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் மகனிடம் கேட்டனர். அப்போது அந்த சிறுவன் தனது கணித ஆசிரியரான ஆதீஸ் (30) என்பவரிடம் பேசுவதாக தெரிவித்தார். இந்நிலையில் அந்த சிறுவனின் தந்தை அவருடைய செல்போனை சோதனை செய்தார். அதில் கணித ஆசிரியர் ஆதீஸ், தனது அந்தரங்க உறுப்பை படம் பிடித்து இன்ஸ்டாகிராம் மூலம் சிறுவனுக்கு அனுப்பியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுதொடரபாக சிறுவனின் தந்தை திருப்பூர் மத்திய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணித ஆசிரியர் ஆதீஸை பிடித்து விசாரித்தனர். அப்போது போலீஸ் விசாரணையில் ஆதீஸ் சிறுவனுக்கு அந்தரங்க உறுப்பை படம் பிடித்து இன்ஸ்டாகிராம் மூலம் அனுப்பியதை ஒப்புக்கொண்டார்.

மேலும் மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ஆதீசை கைது செய்தனர். தனியார் பள்ளி ஆசிரியர் பள்ளி மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.