திருப்புவனம் அருகே காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த இளைஞர் அஜித் குமாரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக ஆறுதல் தெரிவித்துள்ளார். குற்றம் இழைத்தவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த இளைஞர் அஜித் குமார் சம்பவம் தமிழ்நாடு காவல் துறைக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், உயிரிழந்த இளைஞர் அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். தொலைபேசி உரையாடலின்போது, அமைச்சர் பெரியகருப்பன் அஜித் குமார் வீட்டில் உடனிருந்தார்.
போனில் பேசி ஆறுதல் சொன்ன முதல்வர்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக உரையாடிய பதிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதில் அவர் கூறியதாவது:
"திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை நியாயப்படுத்த முடியாத தவறு. இளைஞருக்கு நடந்த இந்த கொடுமை இனி யாருக்கும் நடக்கக்கூடாது. கடமை தவறி குற்றம் இழைத்தவர்களுக்கு நிச்சயம் இந்த அரசு உரிய தண்டனை பெற்றுத் தரும்." என்று உறுதியளித்தார்.
இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சரின் இந்த ஆறுதலும், உறுதிமொழியும் அஜித்குமார் குடும்பத்தினருக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளதாகத் தெரிகிறது.
