மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கில், அவரது உடலில் 44 காயங்கள் இருந்தது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.

மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நடைபெற்று வரும் விசாரணையில், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றுவதில் தமிழக அரசுக்கு ஆட்சேபனை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம் மற்றும் மரிய கிளாட் ஆகியோர் இந்த வழக்கை விசாரிக்கின்றனர். இறந்த அஜித் குமாரின் உடலில் 44 காயங்கள் இருந்தது தொடர்பான பிரேதப் பரிசோதனை அறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இடைக்கால பிரேதப் பரிசோதனை அறிக்கை

இந்நிலையில், திருப்புவனம் நீதிமன்ற நடுவர் வெங்கடாபதி பிரசாத், கோயில் உதவி ஆணையர், மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி டீன் ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது, அஜித் குமார் உடலின் பிரேதப் பரிசோதனை இடைக்கால அறிக்கையை மருத்துவக் கல்லூரி டீன் தாக்கல் செய்தார். இந்த அறிக்கையைப் பார்த்த நீதிபதிகள் கடும் அதிர்ச்சி தெரிவித்தனர்.

"இளைஞர் உடலில் 44 காயங்கள் உள்ளன. மாநிலம் தன் குடிமகனையே கொலை செய்துள்ளது. இளைஞரின் உடலில் எந்த உறுப்பையும் விட்டு வைக்கவில்லை. அஜித் குமார் உடலின் பிரேதப் பரிசோதனை அறிக்கை அதிர்ச்சியாக உள்ளது," என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

மேலும், "பதவி ஆணவத்தில் காவலர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். அஜித் குமார் இறக்கும் வரை, அவர் எதற்காக விசாரிக்கப்பட்டார் என்பதற்கு FIR பதிவு செய்யப்படவில்லை," என்று நீதிபதிகள் காட்டமாக கேள்வி எழுப்பினர்.

சிபிஐ விசாரணை குறித்து தமிழக அரசு

அப்போது, அஜித் குமார் கொலை வழக்கில் தொடர்புடைய அனைத்து உயரதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க அரசு தயாராக உள்ளது என்று அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற ஆட்சேபனை இல்லை என தமிழக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

"அரசு வெளிப்படைத் தன்மையுடன் இயங்குகிறது. யாருக்கும் சாதகமாக செயல்படவில்லை. இந்த வழக்கை எதிர்க்கட்சிகள் அரசியலாகப் பார்க்கின்றன," என்றும் தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது. இதற்கு, "நீங்கள் எதிர் தரப்பில் இருந்தாலும் அதையேதான் செய்திருப்பீர்கள்," என்று நீதிபதிகள் காட்டமாக பதிலளித்தனர்.

இந்த வழக்கில் சில சாட்சியங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்றும் விசாரணை அதிகாரிகள் சில ஆதாரங்களை முறையாக சேகரிக்கவில்லை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். ஜெயராஜ் - ஃபெலிக் என்ற தந்தை - மகன் இருவரும் உயிரிழந்த சாத்தான்குளம் காவல்நிலைய மரண வழக்கை யாராலும் மறக்க முடியாது என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

விசாரணை நீதிபதி நியமனம்

சிபிஐ விசாரணைக்கு ஆட்சேபனை இல்லை என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை எழுத்துபூர்வமாகத் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர் லால் சுரேஷ் இந்த வழக்கை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் ஆவணங்களை முழுமையாக விசாரணை நீதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

மாநில அரசு இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். விசாரணை அறிக்கையை ஜூலை 8ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள் அதுவரை வழக்கின் விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.