டிஜிபி அலுவலகத்தில் புரட்சி தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்குதல் நடத்தினர். திருமாவளவனை விமர்சித்ததால் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. 

பாமக நிறுவனர் ராமதாசுக்கு பாதுகாப்பு வழங்க கோரி டிஜிபி அலுவலகத்திற்கு வெளியே பாமகவினர் வருகைக்காக புரட்சி தமிழகம் கட்சியை நடத்தி வரும் ஏர்போர்ட் மூர்த்தி அங்கு வந்திருந்தார். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நபர்கள் புரட்சி தமிழகம் அமைப்பின் மாநில தலைவராக உள்ள ஏர்போர்ட் மூர்த்தியை பார்த்து எப்படி எங்கள் தலைவர் திருமாவளவனை விமர்சித்து பேசலாம் என கேள்வி எழுப்பினார்.

மேலும் ஆபாச வார்த்தைகளால் திட்டியும் உள்ளார். இதனையடுத்து இரு தரப்பிற்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் புரட்சி தமிழகம் அமைப்பின் மாநில தலைவர் ஏர்போர்ட் மூர்த்தியை கடுமையாக ஓட ஒட விரட்டி தாக்கியுள்ளார். டிஜிபி அலுவலகம் அருகே நடுரோட்டில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, தாக்குதல் நடத்திய நபர் பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனத்தில் தப்பித்து சென்றார். இதுதொடர்பான வீடியோ வைரலானது.

தாக்குதலுக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஏர்போர்ட் மூர்த்தி: பட்டியல் சமூக மக்களின் சப்ளேனில் ("பட்டியல் சாதி துணைத் திட்டம்" - Scheduled Caste Sub-Plan - SCSP) கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டில், ரூ.120 கோடி நிதி செலவில் ஆதரவு நல பள்ளியின் உள்கட்டமைப்பை சரி செய்ய அனுப்பியது. அதில் தமிழக அரசு 2 கோடி ரூபாயை மட்டும் செலவு செய்துவிட்டு மீதியுள்ள ரூ.118 கோடியை திருப்பி அனுப்பியது. இந்த நிதியை ஏன் தமிழக அரசு திருப்பி அனுப்பியது என திருமாவளவன் கேட்க மாட்டார்.

தன்னை கொலை செய்ய திருமாவளவன் முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். இது தொடர்பாக இரண்டு முறை காவல்துறையில் புகார் அளித்தும், அதனை ஏற்க காவல்துறை மறுத்துவிட்டதாக தெரிவித்தார். மேலும், இந்த தாக்குதல் குறித்து காவல்துறைக்கு முன்பே தெரியும். திருமாவளவனுக்கு எதிராக புகார் அளித்தால் நிலைமை மேலும் மோசமாகலாம் என்று காவல்துறையினர் தனக்கு அறிவுறுத்தியதாகவும் மூர்த்தி கூறினார்.

ஏர்போர்ட் மூர்த்தியின் மீதான தாக்குதலை தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டித்துள்ளனர்.

இதுதொடர்பாக அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: சென்னை காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலக வளாகத்தில், காவல்துறை பொறுப்பு தலைமை இயக்குனரை சந்திப்பதற்காக காத்திருந்த புரட்சித் தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி அவர்களை ஒரு கும்பல் சூழ்ந்து கொண்டு கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஏர்போர்ட் மூர்த்தி காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். பட்டப்பகலில் காவலர்கள், பொதுமக்கள் முன்னிலையில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் கண்டிக்கத்தக்கது.

காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்திற்கு வெளியில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரு சமூக, அரசியல் கட்சித் தலைவர் மீது தாக்குதல் நடத்தப்படுவதிலிருந்தே தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவுக்கு மோசமாக சீர்குலைந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். ஏர்போர்ட் மூர்த்தி அவர்களை ஒரு கும்பல் சூழ்ந்து கொண்டு தாக்கும் போது அங்கிருந்த காவலர்களில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் வேடிக்கை தான் பார்த்துக் கொண்டிருந்தனர். மூர்த்தியைப் பாதுகாக்கவோ, குற்றவாளிகளை பிடிக்கவோ அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவது குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும், அதைத் தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல முறை கூறிவிட்டேன். ஆனால், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சூழலை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணமோ, அக்கறையோ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இல்லை. தமிழகத்தில் கொலை, கொள்ளைகள், பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கு இது தான் காரணம் ஆகும்.

தமிழக அரசும், காவல்துறையும் இனியாவது விழித்துக் கொண்டு சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்; மூர்த்திக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.