சில்லென்று மாறும் வானிலை! 8 மாவட்டங்களில் இன்று கனமழை கொட்டித் தீர்க்கும்!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை உள்ளிட்ட 8 மாவடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வளிமண்டல சுழற்சிதான் இதற்குக் காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், "தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்" என்று கூறியுள்ளார்.
மேலும், நீலகிரி, கோயம்புத்தூர், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் சொல்லப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் பணிக்காக சென்னையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்
ஜூலை 3
நாளை (திங்கட்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.
ஜூலை 4
செவ்வாய்க்கிழமை தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யலாம். திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
ஜூலை 5
தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பொழியக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை:
சென்னையைப் பொருத்தவரை, அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். சில பகுதிகளில் கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை அதிகபட்சமாக 36-37 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
சென்னை - திருப்பதி இடையே தமிழகத்திற்கு 3வது வந்தே பாரத் ரயில்?