மெட்ரோ ரயில் பணிக்காக சென்னையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்
சென்னையில் மேடவாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதால் ஒரு வாரத்திற்கு சோதனை முறையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
சென்னையில் பல்வேறு இடங்களில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகின்றன. மேடவாக்கம் சந்திப்பிலும் மெட்ரோ பணிகள் நடக்கின்றன. அதனை முன்னிட்டு இன்று முதல் ஒரு வாரத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்ய தாம்பரம் மாநகரப் போக்குவரத்து காவல்துறை முடிவு செய்துள்ளது. சோதனை முறையில்தான் இந்த போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு வாகன ஓட்டிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தாம்பரம் மாநகர போக்குவரத்து காவல்துறை கேட்டுக்கொண்டிருக்கிறது. தாம்பரம் மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
மேடவாக்கம் கூட்டு சாலை சந்திப்பிலிருந்து சோழிங்கநல்லூா் சந்திப்பு வரை வேளச்சேரி பிரதான சாலை,செம்மொழி சாலை ஆகியவற்றில் மெட்ரோ ரயில் பணி நடைபெற உள்ளது. இதையொட்டி, அந்தப் பகுதியில் சோதனை முறையில் ஜூலை 2 முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
சோழிங்கநல்லூா் சந்திப்பில் இருந்து செம்மொழி சாலை வழியாக தாம்பரம், மாம்பாக்கம் செல்லும் அனைத்து வாகனங்களும் மேடவாக்கம் சந்திப்பில் இருந்து வலதுபுறம் திரும்பி பள்ளிக்கரணை ஜெயசந்திரன் டெக்ஸ்டைல்ஸ் சந்திப்பில் யூ திருப்பம் செய்து மேடவாக்கம் புதிய மேம்பாலம் வழியாக செல்ல வேண்டும்.
மாம்பாக்கம் சாலையில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் மாம்பாக்கம் மேடவாக்கம் சந்திப்பில் இருந்து வலதுபுறம் திரும்பி ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் சந்திப்பில் U-Turn) இருந்து திரும்பி மேடவாக்கம் புதிய மேம்பாலம் வழியாகச் செல்ல வேண்டும். மேடவாக்கம் சந்திப்பு பகுதியில் இருந்து மாம்பாக்கம் சாலை,வேளச்சேரி பிரதான சாலை வழியாக தாம்பரம் நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"சோதனை அடிப்படையில் தான் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பணிகளை முடிக்க எவ்வளவு நாட்கள் ஆகும் என அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து இந்த மாற்றத்தைத் தொடரலாமா வேண்டாமா என்று முடிவு செய்யப்படும்" என போக்குவரத்து துறை காவலர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னை - திருப்பதி இடையே தமிழகத்திற்கு 3வது வந்தே பாரத் ரயில்?