கணவனை கொன்றுவிட்டு குடிபோதையில் தவறி விழுந்து உயிரிழந்ததாக மனைவி நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியக்குளம் அருகே பாலப்பட்டியில் கணவனை கொன்றுவிட்டு குடிபோதையில் தவறி விழுந்து உயிரிழந்ததாக நாடகமாடிய அவரது மனைவியை காவல் துறையினர் கைது செய்தனர்.

பாலப்பட்டியை சேர்ந்த தமிழ்செல்வன் என்பவா் கடந்த 23ம் தேதி இரவு குடிபோதையில் கீழே விழுந்து இறந்துவிட்டதாக அவரது மனைவி மீனா தெரிவித்திருந்தார். அதனை நம்பிய கிராம மக்கள் தமிழ்செல்வனின் உடலை இறுதிசடங்கு செய்து ஊர் வழக்கப்படி அடக்கம் செய்தனர்.

இதற்கிடையில் தமிழ்செல்வனின் மரணத்தில் சந்தேகம் அடைந்த அவரது சகோதரர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் மீனாவின் செல்போன் உரையாடல்களை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். அதில் மீனாவும் அவரது காதலரும் இணைந்து தமிழ்செல்வனை கொன்று நாடகமாடியது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து தமிழ்செல்வனின் உடலை தோண்டி எடுத்து காவல் துறையினர் பிரேத பரிசோதனை செய்தனர். இதனிடையே கொலை தொடர்பாக சுரேஷ் என்பவர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.