உளுந்தூர்பேட்டை அருகே பெண்ணின் வறுமைக் கதையைக் கேட்ட திருடன் தான் திருடிய 13 சவரன் நகையை திரும்ப ஒப்படைத்துவிட்டுச் சென்ற சம்பவம் சுவாரசியத்தை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நத்தாமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுதா. இவரது கணவர் 15 ஆண்டுகளுக்கு முன்னரே உயிரிழந்துவிட்டார். சுதா தனி நபராக கூலி வேலை செய்தும், ஆடுகளை மேய்த்தும் தனது மகள்களோடு வாழந்து வருகிறார். இந்நிலையில் அவர் நேற்று காலை சுதா வழக்கம் போல் ஆடு மேய்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.
மாலையில் வீட்டிற்கு வந்த சுதா வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனைத் தொடர்ந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வீட்டின் பின் புறத்தில் துளையிட்டு வீட்டிற்கு நுழைந்து பீரோவில் இருந்த 13.5 சவரன் நகைகள் திருடுபோனதை உறுதி செய்தனர்.
தனது மகள்களின் படிப்பு செலவுக்காகவும், திருமணத் தேவைக்காகவும் தான் சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த நகைகள் இப்படி திருடுபோய்விட்டதே என்று தொடர்ந்து அழுத வண்ணம் இருந்துள்ளர். நகைகளைக் காணவில்லை என்ற அப்பெண்ணின் அலறல் சத்தத்தை அறிந்த திருடன் அன்றைய தினமே இரவு நேரத்தில் அனைவரும் உறங்கிய பின்னர் மீண்டும் சுதா வீட்டிற்கு வந்துள்ளான்.
வீட்டின் அருகில் இருந்த ஆட்டுக் கொட்டகையில் 13 சவரன் நகையை வீசிவிட்டு அரை சவரன் நகையை மட்டும் எடுத்துச் சென்றுள்ளான். திருடுபோன நகைகள் மீண்டும் கிடைத்ததை அடுத்து சுதா மற்றும் குடும்பத்தினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சுவாரசியத்தை ஏற்படுத்தி உள்ளது.
