2025-26 ஆம் கல்வியாண்டிற்கான பி.எட்., மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியுள்ளது. விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். வகுப்புகள் ஆகஸ்ட் மாதம் தொடங்கும்.
Higher education Tamil Nadu : பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதே போல கல்லூரிகளில் வகுப்புகளும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பி.எட்., முதுநிலைப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கான கலந்தாய்வு மற்றும் விண்ணப்ப விநியோகம் தொடர்பான தகவலை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில்,இன்று (20.06.2025) சென்னை இராணி மேரி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் 2025-26 பி.எட், மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவு மாணாக்கர்களின் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவினை உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் அவர்கள் தொடங்கி வைத்தார்.
கல்லூரி மாணவர்களுக்கு விண்ணப்ப விநியோகம்
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இன்று (20.06.2025) முதல் 09.07.2025 வரை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். 18.07.2025 அன்று மாணாக்கர் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். 21.07.2025 முதல் 25.07.2025-க்குள் மாணாக்கர்கள் தங்கள் விருப்ப கல்லூரியைத் தேர்வு செய்யலாம். 28.07.2025 அன்று மாணாக்கர்களுக்கான இட ஒதுக்கீட்டு ஆணை வெளியிடப்படும்.
மாணாக்கர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆணையை தங்கள் உள்நுழைவு ID மூலம் www.iwiase.ac.in என்ற இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரியில் சேரவேண்டும் என கூறினார். ஆகஸ்டு 6 முதல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணாக்கர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என அமைச்சர் கோவி செழியன் தெரிவித்தார்.
மேலும், 2025 - 2026 ஆம் கல்வியாண்டில், 110 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பட்டப்படிப்பிற்கான மாணாக்கர் சேர்க்கை இடங்கள் 24,309 உள்ளன. இதற்கு மாணாக்கர்கள் விருப்பப்பட்ட பாடப்பிரிவுகளுக்கு இன்று (20.06.2025) முதல் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
ஆகஸ்டு 4 முதல் அனைத்து முதுநிலை முதலாம் ஆண்டு மாணாக்கர்களுக்கு வகுப்புகள் தொடங்கும். 2025-26 முதுநிலைப் பாடப்பிரிவுகளுக்கான மாணாக்கர் சேர்க்கை தொடர்பான விவரங்கள் கீழ்குறிப்பிடபட்டுள்ளன.
முதுநிலைப் பாடப்பிரிவு 2025 26 மாணாக்கர் சேர்க்கை தொடர்பான விவரங்கள்
விண்ணப்பக் கட்டணம்
ஒரு மாணாக்கருக்கு ரூ.58/-பதிவுக் கட்டணம் - ரூ.2/- மட்டும்- SC/ST பிரிவினருக்குப் பதிவுக் கட்டணம் - ரூ.2/-மட்டும். விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை
விண்ணப்பம் பதிவுசெய்யத் தொடக்க நாள்- 20.06.2025 (வெள்ளிக்கிழமை)
விண்ணப்பம் பதிவுசெய்ய இறுதி நாள்- 15.07.2025 (செவ்வாய்க்கிழமை)
மாணாக்கர்களின் தரவரிசைப் பட்டியல் கல்லூரிகளுக்கு அனுப்பப்படும் நாள்- 18.07.2025 (வெள்ளிக்கிழமை)
சிறப்பு ஒதுக்கீடு மாணாக்கர்களுக்கான கலந்தாய்வு (மாற்றுத்திறனாளிகள்/ விளையாட்டு வீரர்கள்/முன்னாள் ராணுவத்தினர்/ தேசிய மாணவர் படை/பாதுகாப்புப் படைவீரர்கள்) - 25.07.2025 (வெள்ளிக்கிழமை)
கலந்தாய்வு நாட்கள்- 28.07.2025( திங்கள்கிழமை) முதல்
முதுநிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் நாள்- 04.08.2025 (திங்கள்கிழமை)
