தமிழ்நாடு பதிவுத்துறையின் புதிய 'ஸ்டார் 2.0' மென்பொருள் மூலம் பத்திரப் பதிவு செயல்முறை மேம்படுத்தப்பட்டுள்ளது. பத்திர பதிவு செய்த உடனேயே  வில்லங்கச் சான்றிதழ் மொபைலில் SMS வாயிலாக வழங்கப்படும்.

Encumbrance Certificate : ஆசை ஆசையாக சிறுக, சிறுக சேமித்த பணத்தில் வீடோ நிலமோ மக்கள் வாங்க ஆசைப்படுவார்கள், சொந்தமாக வீடு நிலம் வாங்க வேண்டும் என்பது ஏழை எளிய மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் கனவாகும். அந்த வகையில் பல இடங்களில் போலியான ஆவணங்களை காட்டி நிலங்களை விற்பனை செய்வதால் சாதாரன மக்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகும். மேலும் உண்மையான உரிமையாளர்கள் தங்கள் சொத்துக்களை இழக்க நேரிடும் சம்பவம் நடைபெறுகிறது. போலி ஆவணங்களால் சொத்து உரிமை தொடர்பான சட்டப் போராட்டங்கள் உருவாகி, நீண்டகாலமாக வழக்குகள் இழுத்தடிக்கும் நிலையும் தொடர்கிறது. மேலும் போலியான சொத்துக்களை வாங்கும் போது அந்த சொத்தில் எந்த பிரச்சனை உள்ளது. ஏதேனும் சட்ட சிக்கல்கள் உள்ளதா என்பதை தெரிந்து கொள்வதற்கு வில்லங்க சான்றிதழ் பெரிதும் பயன் கொடுத்து வருகிறது.

போலியான ஆவண விற்பனை சொத்தால் பாதிக்கப்படும் மக்கள்

ஒரு சொத்தின் உரிமை மற்றும் அதன் மீதான சட்டப்பூர்வ பொறுப்புகளை அதாவது கடன், அடமானம், விற்பனை போன்றவை) உறுதிப்படுத்தும் முக்கியமான ஆவணமாக உள்ளது. இது சொத்து வாங்குபவர்கள் அல்லது வங்கிக் கடன் பெறுபவர்களுக்கு அவசியமாகும். ஏனெனில் இது சொத்தின் முந்தைய உரிமையாளர்கள், பத்திரப் பதிவு விவரங்கள் மற்றும் வில்லங்கங்கள் பற்றிய தகவல்களை வெளிப்படுத்துகிறது. இந்த நிலையில் வில்லங்க சான்றிதழை பத்திர பதிவு தினத்தில் மொபைல் போனில் எஸ்எம்எஸ் வாயிலாக பத்திர பதிவுத்துறை அனுப்பும் திட்டத்தை தொடங்கியுள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு பதிவுத்துறையில் பத்திரப் பதிவு செயல்முறையை மேம்படுத்துவதற்காக, ‘ஸ்டார் 2.0’ மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பத்திர பதிவு தொடர்பான சேவைகளை மேலும் விரைவாகவும், பொது மக்களுக்கு ஏற்ற வகையிலும் மாற்றுவதற்காக அரசு சில முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இது வரை பத்திரங்களைப் பெற பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை காணப்பட்டு வந்தது. இந்நிலையில், புதிய நடவடிக்கையின் மூலம் பதிவான பத்திரங்களை அந்தந்த நாள் வணிக நேரத்துக்குள் வழங்கும் நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, பத்திரப் பதிவு நடைபெற்ற அதே நாளில் பத்திரத்தை வழங்கவும், பதிவு முடிந்த சில மணி நேரங்களில் மொபைல் போனில் வில்லங்கச் சான்று வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதில் குறித்த சொத்திற்கு எந்த விதமான சட்ட சிக்கல்கள் உள்ளனவா, கடன்கள் அல்லது பிணையமாக வைக்கப்பட்டுள்ளதா போன்ற விவரங்கள் இடம்பெறும். அனைத்து பதிவுகளும் தொலைநோக்கு தகவல் தொழில்நுட்பங்கள் (IT) மற்றும் இணையவழி கண்காணிப்பு மூலம் மேற்கொள்ளப்படுவதால், பாதுகாப்பான முறையில் ஆவணங்கள் பராமரிக்கப்படுகின்றன.

இந்த புதிய சேவைகள் பத்திர பதிவு செயல்முறையின் காரணமாக வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் நோக்கத்தோடு மேற்கொள்ளப்படுகின்றன. பொதுமக்கள் இனி தங்கள் பத்திரங்களை பதிவு செய்தவுடனே, தேவையான அனைத்து ஆவணங்களையும் விரைவாக பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வில்லங்கச் சான்று ஆன்லைனில் பெறுவது எப்படி?

தமிழ்நாடு பதிவுத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnreginet.gov.in மூலம் வில்லங்கச் சான்றுக்கு விண்ணப்பிக்கலாம்.

பயனர்கள் தங்கள் பெயர், மொபைல் எண், பதிவு மண்டலம், மாவட்டம், சார்-பதிவாளர் அலுவலகம், சொத்து அமைந்துள்ள கிராமம், சர்வே எண், தேதி மற்றும் எத்தனை ஆண்டுகளுக்கு சான்று தேவை என்பது போன்ற விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

OTP மூலம் மொபைல் எண்ணை உறுதிப்படுத்தி, சான்றிதழை PDF வடிவில் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.

புதிய முறையின் நன்மைகள்:

பதிவு நடந்த உடனே பத்திரம் வழங்கப்படுவதால், காத்திருப்பு நேரம் குறைகிறது.

வில்லங்கச் சான்று மொபைல் மூலம் விரைவாக கிடைப்பதால், பொதுமக்களுக்கு நேரமும் உழைப்பும் மிச்சமாகிறது.

இந்த சேவைக்கு எந்தவித கட்டணமும் அல்லது லஞ்சமும் இல்லை, இது வெளிப்படையான மற்றும் திறமையான செயல்முறையை உறுதி செய்கிறது.