நாட்றம்பள்ளி அருகே நிர்வாண பூஜை செய்த நபரை தட்டிக்கேட்டதால், அவரது தம்பியுடன் சேர்ந்து இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே நடைபெற்ற பரபரப்பான சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அக்ரகாரம் பூசிக்கல்மேடு பகுதியை சேர்ந்த பரசுராமன் (33) என்பவர், சில நாட்களுக்கு முன் நள்ளிரவில் ராஜாத்தி என்ற பெண்மணியின் வீட்டு முன்பு பூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் நிர்வாணமாக இருந்து பூஜை செய்தது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
அந்த நேரத்தில் அப்பகுதியில் வசிக்கும் குமரன் (27) என்பவர் வெளிச்சம் கண்ணில் பட்டதால் அருகே சென்று பார்த்தார். அப்போது நடந்த காட்சியைக் கண்டு, “ஏன் இங்கு இப்படிப் பூஜை செய்கிறாய்?” என்று கேட்டதாக. இதையடுத்து பரசுராமன் மற்றும் குமரன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அங்கு கூடியிருந்தவர்கள் தலையிட்டு சமரசம் செய்ததால் அந்த விவகாரம் தற்காலிகமாக முடிவடைந்தது.
ஆனால், அதற்குப் பிறகு சம்பவம் வேறு வழியாக திருப்பம் பெற்றது. அடுத்த நாள் இரவு, குமரன் மற்றும் அவரது தாய் ஜெயலட்சுமி வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தபோது, பரசுராமனின் தம்பி சாந்தகுமார் (29) மற்றும் பரசுராமனே இருவரும் குமரன் வீட்டுக்குள் புகுந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அவர்கள் குமரனின் தலையில் கல்லை வீசியதால் அவர் படுகாயம் அடைந்தார்.
குமரன் மற்றும் அவரது தாய் கத்தி கூச்சல் விட, அப்பகுதி மக்கள் ஓடி வந்து அவரை காப்பாற்றினர். உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் குமரனை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல்க்காக ஓசூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஜெயலட்சுமி நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பரசுராமனையும் அவரது சகோதரர் சாந்தகுமாரையும் கைது செய்தனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். நிர்வாண பூஜையை தட்டி கேட்டதால் உயிருக்கு ஆபத்தான தாக்குதல் நடந்தது என்ற தகவல் பரவியதால், அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் பரபரப்பு ஏற்பட்டது.
